மூலவர்: கைலாசநாதர், சிறப்பு மூர்த்தம்: தட்சிணாமூர்த்தி, அம்பாள்: அகிலாண்டேஸ்வரி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் கைலாசநாதர். அகிலாண்டேஸ்வரி அன்னை உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். தட்சிணாமூர்த்தி கோயில் என்று பிரபலம்.
உலகத்தின் முதற்குரு, உபதேச மூர்த்தி சிவபெருமான் இங்கு பிரதான சன்னதி கொண்டுள்ளார்.
தட்சிணாமூர்த்தியின் வடிவம் பிரமிப்பூட்டும் வகையில் காட்சி தருவது நமது கண்களையும் மனதையும் விட்டு அகலாது.
பொதுவாக சிவாலயங்களின் கோஷ்டத்தில் இருக்கும் தென்முகக்கடவுள் இங்கு மூலவராக தனி சந்நிதி கொண்டு அருள்பாலிப்பது விசேஷம்.
விரிந்த தன் ஜடாபாரத்தில், பிறைச்சந்திரனை சூடியும், மேற்கரங்களில் அக்னி, சர்ப்பம் ஆகியவற்றை ஏந்தியும், கீழ்க்கரங்களில் சுவடிகள் மற்றும் சின்முத்திரை ஆகியன கொண்டும், இடது காலை மடித்து வலது தொடை மீது இருத்தியும், வலது காலைத் தொங்கவிட்டும், வலது பாதத்தினால் அக்ஞானமான அபஸ்மார புருஷனை மிதித்துக் கொண்டும், பஞ்சாசனத்தில் வீராசனமாக வீற்றிருக்கும் யோக தட்சிணாமூர்த்தியின் திருவுருவத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
அஷ்ட சிம்மங்கள், அஷ்ட நாகங்கள், அஷ்ட த்வார பாலகர்கள், அஷ்ட கஜங்கள், அஷ்டதிக் பாலகர்கள் ஆகியவற்றுடன் அடிப்பகுதியில் கூர்மத்தைக் கொண்டும் அமைந்த பஞ்சாசனம்.
காலடி பீடத்தில், இரண்டு ரிஷிகளையும், யானை மீதிருக்கும் துவார பாலகர்களையும் காணலாம்.
பின்னால் சப்த ரிஷிகள், கஜலட்சுமி, வீரபத்ரர், மற்றும் பூத கணங்கள் காட்சி தருகின்றனர். பின்னணியில் வழக்கமாக காணப்படும் ஆலமரம் இல்லை.
தட்சிணாமூர்த்தியே பிரதானமாக இருப்பதால், மற்றைய மூர்த்தங்கள், பரிவாரத் தேவதைகளாகக் கருதப்படுகின்றனர். ஸ்ரீ தேவி, பூ தேவி சமேத கோவிந்தராஜப் பெருமாள் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார். கும்பஞ்சாரா எனப்படும் கல் வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்கள் அருமையான வேலைப்பாடுகள் உடையவை. வடமேற்கு மூலையில் உள்ள நாககன்னி சக்தி வாய்ந்தவள்.