சிவபெருமான் - தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளியிருந்த காலத்தில், மன்மதன் பாணம் வீசியதால், சுட்டெரித்து, பின்னர் யோகத்தை முடிக்க, உகந்த இடம் இதுவென, இங்கு எழுந்தருளியதாக கூறுவர்.
‘நிசும்பன்’, ‘சும்பன்’ எனும் இரண்டு அசுரர்கள், தேவர்களையும் - முனிவர்களையும் துன்புறுத்தி வந்தனர். இதிலிருந்து விடுபட அவர்கள் ‘பரமேஸ்வரியிடம்’ முறையிட்டனர். பரமேஸ்வரி தனது குருதியின் மூலம் உருவாக்கப்பட்ட ‘காளி தேவியை’ ஏவி, அசுரர்களின் கொட்டத்தை அடக்கி, அவர்களை சம்ஹாரம் செய்தாள்.
அசுரர்களின் ரத்தத்தைக் குடித்ததால் அசுர குணம் கொண்ட காளி, ரத்த வெறி கொண்டு, அட்டகாசம் செய்யலானாள். இதனைக் கண்டு பயந்த மகரிஷிகள், சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். கோர வடிவம் ஒன்றை எடுத்து காளியை அடக்க, திருவாலங்காட்டை அடைந்தார் சிவபெருமான்.
சூழ்ச்சியால் வெற்றி கொள்ள எண்ணிய காளி, சிவபெருமானை நடன போட்டிக்கு அழைத்தாள். சிவபெருமான் ‘ஊர்த்துவ தாண்டவம்’ ஆடி, காளியை வெற்றி கொண்டார் என ஸ்தல வரலாறு.
முக்தி தீர்த்தக் கரையில், ‘சுனந்த முனிவரும்’, ‘கார்க்கோடகனும்’ பார்க்கும் வண்ணம் நடனப் போட்டி ஆரம்பமானது.
சிவபெருமானது கங்கணமாயிருந்த கார்க்கோடகன், கையில் விஷத்தை கக்கியதால், சாபம் பெற்று, விமோசனம் வேண்டி, பூலோகம் வந்தான். இவ்விறைவனை வழிபட வந்த இடத்தில், சுனந்த முனிவருடன் சேர்ந்து, இந்த நடனத்தை காணும் பாக்யம் கிட்டியது.
ஊர்த்துவ தாண்டவம் ஆட முடியாத காளி, தனது தோல்வியை ஒப்புக் கொண்டாள். ஆலயத்தின் இடது பக்கம், காளிக்கு இடம் தந்து, அவளுக்கு பூஜை செய்த பிறகே, தனக்கு பூஜை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
சுனந்த முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில், அவர் மீது புற்று ஒன்று உண்டாகி, முனிவர் மீது முஞ்சம்புல் முளைத்ததனால், அவருக்கு ‘முஞ்சிகேசி’ என்ற பெயர் உண்டானது.
கோவிலின் மேற்கே ‘முக்தி தீர்த்தம்’ எனும் குளமும், அதன் வடகிழக்கு மூலையில் பத்ரகாளி கோவிலும் உள்ளன. காளியை முதலில் வழிபட்டு பின்னர் ஆலங்காட்டு அப்பனை வணங்க வேண்டும்.
சுகந்த முனிவர் மற்றும் கார்க்கோடகன் வழிபட்ட ஸ்தலம். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், காரைக்கால் அம்மையார், பட்டினத்தார், வள்ளலார், அருணகிரிநாதர், கச்சியப்பர், பாம்பன் ஸ்வாமிகள் - ஆகியோரின் பாடல்கள் பெற்ற ஸ்தலம்.