'தண்' என்றால் குளிர்ச்சி, 'கா' என்றால் சோலை. குளிர்ச்சியான சோலைகள் சூழ்ந்துள்ள ஸ்தலம் என்பதால் திருத்தண்கா எனப் பெயர் கொண்டது. முற்காலத்தில் தர்ப்பை புல் அடர்ந்திருந்த பகுதியாக விளங்கியதால் தூப்புல் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
விளக்கின் ஒளி வெளிச்சத்தைத் தருவது போல், சுய ஸ்வரூபம், ஜீவான்ம ஸ்வரூபம், உபாய ஸ்வரூபம், விரோதி ஸ்வரூபம், புருஷார்த்த ஸ்வரூபம் என்னும் அர்த்த பஞ்சகத்தை திருமங்கையாழ்வாருக்கு அருளியதால் தீபப்பிரகாசர் என்று திருநாமம் பெற்றார்.
பத்தினியின்றி யாகம் ஆரம்பித்த பிரம்மனுக்கு பாடம் புகட்ட, யாகத்தை அழிக்க வேகமுடைய ஆறாக (வேகவதி) பாய்ந்து வந்தாள் சரஸ்வதி. தூப்புல் பகுதி முழுவதையும் நீர்ப்பெருக்கால் நிறைத்து, இருட்டாக்கினாள். அந்த இருளை அகற்றி, ஒரு பெரும் ஜோதி வடிவமாக பிரம்மனுக்கு காட்சி தந்தார் பெருமாள். இதன் பயனாக பிரம்மனின் யாகம் நன்கு நிறைவேறியது. அந்த ஜோதி வடிவத்திலேயே விளக்கொளி பெருமாளாக இங்கு நிலை கொண்டார் என ஸ்தல வரலாறு.
மீண்டும் அசுரக் கூட்டத்தை ஒரு தீப்பந்தாக மாற்றி ஏவினாள் சரஸ்வதி. அந்த தீப்பந்தை, தீப்பிழம்பாக மாற்றி தனது கரங்களில் ஏந்திக்கொண்டார் தீபப்பிரகாசர் என ஸ்தல வரலாறு மேலும் தெரிவிக்கின்றது.