பாற்கடலைக் கடையும்போது மந்தாரமலை அசையாமல் இருக்கும் பொருட்டு, திருமால் ஆமை வடிவம் கொண்டு, தனது முதுகில் தாங்கினார். அதை தாங்கி நிற்கும் வலிமையைப் பெற தன்னுடைய பங்கு குறித்து இறுமாப்படைந்து, கடலைக் கலக்கி ஆர்ப்பாட்டம் செய்தார்.
ஆமையின் செருக்கை அடக்கி, அவதார நோக்கத்தைப் புரிய வைக்க எண்ணிய சிவபெருமான், ஆமையின் உயிரைப் போக்கி அதன் ஓட்டை அணிந்தார். கடலைக் கலக்கியதால் துன்புற்ற உயிரினங்களுக்காக வருந்தி, இத்தலத்திலுள்ள முருங்க மரத்தின் கீழ் ஜோதி வடிவமாக விளங்கிய சிவலிங்கத்தைப் பூஜித்தார். அவர் வழிபட்ட லிங்கமே கச்சபேஸ்வரர் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
திருமால் ஆமை வடிவில் சிவலிங்கத்தைப் பூஜிக்கும் காட்சி, ஸ்தல விருட்சமான முருங்கை மரத்தின் கீழ் புடைப்பு சிற்பமாக இருக்கின்றது. இடுப்பளவிற்கு மேல் மனித வடிவிலும், கீழ்ப்பகுதி ஆமை வடிவுடனும் தோன்றும் திருமால், சிவபெருமானைப் பூஜிக்கும் காட்சி அழகாக இருக்கின்றது.
'சித்' என்றால் நுண்ணறிவு் 'சித்தீஸ்வரம்' என்றால் ஒப்பற்ற ஆற்றலை பெறும் இடம் என்று கொள்ளலாம். சித்தீச்சரங்களை வணங்குவதால் சித்தர்களின் அருளும் சேர்ந்து கிடைப்பதாக ஐதீகம்.
ததீசி முனிவருக்கும், குபன் எனும் அரசனுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் கோபமுற்ற மன்னன் தனது வஜ்ராயுதத்தால் முனிவரை வெட்டினான். சுக்கிரன் முனிவரை உயிர் பெறச் செய்தார்.
சுக்கிரனின் அறிவுரைப்படி ததீசி முனிவரும், இஷ்ட தீர்த்தத்தில் நீராடி, இஷ்ட சித்தீஸ்வரரைப் பூஜித்து வஜ்ர தேகத்தைப் பெற்றார். பின்னர் ததீசி முனிவர் அந்த மன்னனை வெற்றி கொண்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
சூரியன் அமைத்த சூரிய தீர்த்தமே இஷ்ட சித்தி தீர்த்தம் எனப்படுகின்றது. கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் இதில் மூழ்கி எழுந்து சித்தீஸ்வரர்களையும், கச்சபேஸ்வரரையும் வழிபடுகின்றனர். சந்திரன், குபேரன், சாம்பன், நளன், ராமர், பஞ்ச பாண்டவர்கள் ஆகியோர் இத்தீர்த்தத்தில் நீராடி நலன் பெற்றனர் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
மூலவர்: கச்சபேஸ்வரர்் அம்பாள்: சுந்தராம்பிகை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிபவர் கச்சபேஸ்வரர். மூலவருக்கு புனுகு சட்டம் மட்டுமே சாத்துகின்றனர். அபிஷேகம் கிடையாது.
திருமால் ஆமை உருவத்தில் இவ்விறைவனை வழிபட்டதால் கச்சபேஸ்வரர் என்று பெயர் கொண்டார். (கச்சபம் - ஆமை). மூலவருக்கு பின்புறமாக சோமாஸ்கந்த மூர்த்தியைக் காணலாம். கிழக்கு பார்த்த சந்நிதி.
இங்கு எழுந்தருளியுள்ள சத்ய மொழி விநாயகரை வணங்குபவர்கள் எப்பேர்பட்ட இன்னல்கள் வந்தாலும் அதிலிருந்து விடுபடுவர். திருமாலால் வழிபடப்பட்ட இந்த விநாயகருக்கு பொய்யா மொழி கணபதி என்று பெயர்.
நான்கு சந்நிதிகளுக்கு நடுவே ஐந்தாவது சந்நிதியில் கோவில் கொண்டுள்ள கணபதியை பஞ்சசந்தி விநாயகர் என்று அழைக்கின்றனர்.
உட்பிரகாரத்தில் மஹாகணபதி, நந்திகேஸ்வரர், நந்திகேஸ்வரி, இரட்டை விநாயகர், அறுபத்திமூவர், நால்வர், விஷ்ணு துர்க்கை, பைரவர், சரஸ்வதி, சூரியன், ஆதி கேசவப் பெருமாள், வள்ளி-தெய்வயானை உடனாய ஆறுமுகப் பெருமான், சாஸ்தா, நவகோள்கள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். அவரவர்களின் வரலாற்றை விளக்கும் வகையில், வித்தியாசமான சிற்பங்களாக இருப்பது, எங்கும் காணாத விசேஷம்.
வேத சித்தீச்சரம், இஷ்ட சித்தீச்சரம், ஞான சித்தீச்சரம், யோக சித்தீச்சரம் என நான்கு சித்தீச்சரங்கள் இவ்வாலயத்தில் உள்ளன.
வேத சித்தீச்சரம்:
(உள் கோபுரத்தைக் கடந்து வலப்புறமாக திரும்பினால் வரும் தெற்கு நோக்கிய மண்டபத்திலுள்ளது)
மூலவர்: வேதலிங்கம், சதுர்முகேஸ்வரர்் அம்பாள்: வேதவல்லி என்கிற ஆரணவல்லி.
சிவபெருமான் நான்கு வேதங்களையும் தனது நான்கு முகங்களாக அருளிச் செய்ததால், சிவலிங்க மூர்த்தம் நான்கு திருமுகங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இறைவனுக்கு சதுர்முகேஸ்வரர் என்றும் வேதலிங்கம் என்றும் பெயர்கள் வந்தன.
வேதங்களை நன்கு அறியச் செய்து இறையருளை சித்திக்கச் செய்வதால் வேத சித்தீச்சரம் எனப் பெயர் கொண்டது. இதையடுத்துள்ள நடராஜர் சபையில், சிவகாமி உடனாய நடராஜரை தரிசிக்கலாம்.
இஷ்ட சித்தீச்சரம்:
(ஆலயத்தின் வடமேற்கு மூலையில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது)
மூலவராக இஷ்டசித்தீஸ்வரர் எழுந்தருளியுள்ளார்.
இஷ்ட சித்தீஸ்வரத்தின் தென்கிழக்கில் உள்ள திருக்குளமே இஷ்ட சித்தி தீர்த்தம். குளக்கரையில் ஜலகண்டேஸ்வரர் எழுந்தருளியுள்ளார்.
அசுரர்களின் குருவான சுக்கிரன், இஷ்ட சித்தி தீர்த்தத்தில் நீராடி, அனுதினமும் இஷ்ட சித்தீஸ்வரரை வழிபட்டு, இறந்தவர்களையும் - இறந்தவற்றையும் உயிர்ப்பிக்கும் ம்ருத சஞ்சீவனி மந்திரத்தைப் பெற்றார். அஷ்டமா சித்திகளையும் அடைந்தார்.
இஷ்ட சித்தீச்சரத்தின் தென் மூலையில் ஞான சித்தீஸ்வரம், அடுத்து யோக சித்தீஸ்வரம் அமைந்துள்ளன.
சோமஸ்கந்த மூர்த்தியின் சந்நிதியில் பெரிய சிவலிங்கமாக எழுந்தருளியுள்ளார் யோகசித்தீஸ்வரர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.