தஞ்சை மாமணிக் கோவில் என்பது மணிக்குன்றப் பெருமாளை குறிப்பிடுவதாக கூறப்பட்டாலும், இப்பெயர் தற்போது வெண்ணாற்றங்கரையிலுள்ள மூன்று கோவில்களையும் சேர்த்தே குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
மூன்று கோவில்களிலும் மூலவராக சேவை சாதிப்பது ஸ்ரீமந் நாராயணனே - மூன்று வெவ்வேறு திருநாமங்கள் கொண்டு சேவார்த்திகளுக்கு சேவை சாதிக்கின்றார். மூன்று கோவில்கள் அடங்கிய இந்த திவ்ய தேசத்திற்கு மாமணிக்கோவில் என்று திருமங்கை ஆழ்வார் பெயர் கொடுத்துள்ளார்.
இந்த மூன்று கோவில்களுமே ஆதியில் தஞ்சை பெரிய கோவிலின் வடமேற்கு பகுதியில் இருந்தனவாம். இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் சில காரணங்களுக்காக வெண்ணாற்றங்கரைக்கு மாற்றப்பட்டனவாம். முன்பு தனித்தனியாக இருந்த கோவில்களை ஒன்றாக இணைத்து பாடினார்கள் ஆழ்வார்கள். அதன்படி 16ஆம் நூற்றாண்டில் இம் மூன்று கோவில்களையும் ஒரே இடத்தில் இணைத்து நிர்மாணித்தான் தஞ்சையை ஆண்ட ஒரு நாயக்க மன்னன் எனக் குறிப்பொன்று கூறுகிறது.
பராசர முனிவர் தனக்கு பங்காக கிடைத்த அமிர்தத்தை இத்தலத்து திருக்குளத்தில் கரைத்து விட்டு அதன் கரையில் அமர்ந்து கடுந்தவம் மேற்கொண்டார். இந்த அமிர்த கரைசல் கலந்த நீரைப் பருகுபவர்கள் அழிக்க முடியாத பலம் பெற்று வாழ்வார்கள் என்ற ரகசியத்தை தெரிந்து கொண்ட மூன்று அசுரர்கள் இந்த நீரைப் பருகி அளவில்லா பலத்துடன் விளங்கினார்கள்.
தஞ்சகன், தாரகன், தண்டகன் எனும் அந்த மூன்று அசுரர்கள் ஏற்கனவே வரங்கள் பல பெற்றிருந்ததாலும், அமிர்த நீரை பருகியதாலும் அவர்களை யாராலும் வெல்ல முடியாது போயிற்று. பராசரர் சிவபெருமானிடம் முறையிட்டதால் அவர் மாகாளியை அனுப்பி வைத்தார்.
அசுரர்கள் மீண்டும் மீண்டும் அமிர்த நீரைப் பருகி மேலும் பலம் பெறாமலிருக்க, திருமால் கார்முகிலாய் தோற்றம் கொண்டு அமிர்த புஷ்கரிணியின் நீரைப் பருகி விட்டார். அதனால் அசுரர்கள் சிறுக சிறுக பலம் இழந்தனர். தாரகன், தண்டகனை காளி வதம் செய்தாள். கார்முகிலாயிருந்த நீலமேகப் பெருமாள் உடனே மணிக்குன்றப் பெருமாளாகி தஞ்சகனுடன் போரிட்டார். அவன் யானை வடிவம் கொண்டு தாக்கலானான். உடனே பெருமாள் வீரசிங்கராய் உருவெடுத்து தஞ்சகனை வதம் செய்தார்.
சாகும் தறுவாயில் தஞ்சகன் இந்த மூன்று பெருமாள்களும் இங்கேயே கோவில் கொண்டு பக்தர்களை ரட்சிக்க வேண்டும் என்றும், இந்த பூமி தன்னுடைய பெயரிலேயே அழைக்கப்பட வேண்டும் என்று வேண்டினான். அதன்படி இவ் ஊர் தஞ்சாவூர் என அழைக்கப்படுகிறது என ஸ்தல வரலாறு.
மூன்று கோவில்களிலும் ஸ்ரீமந் நாராயணனே உற்சவ மூர்த்தியாக கையில் செங்கோலுடன் காட்சிதருகின்றார்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று.