சேரமான் பெருமானோடு சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள், திருச்சுழியல் எனும் ஸ்தலத்தில் தங்கி இரவு தூங்கிக் கொண்டு இருந்தபோது, காளை வடிவம் கொண்டும், கையில் பொற்செண்டு கொண்டும், திருமுடியில் சுழியுடனும் கனவில் வந்து காட்சி தந்த இறைவன் யாமிருக்குமிடம் கானப்பேர் எனக் கூறி மறைந்தாராம். திருக்கானப்பேர் என்பது தேவாரக் காலத்துப் பெயர்.
சுந்தரர் இவ்வூர் எல்லையை வந்தடைந்ததும் பாதை முழுவதுமாக சிவலிங்கங்களாக காட்சி தந்தமையால் கால்களை தரையில் பதிக்க மனமில்லாமல் வருத்தமுற்று பாடினார். உடனே சிவபெருமான் தனது காளையை அனுப்பினார். அது சுந்தரர் நின்ற இடம் வரை வந்து பின்னர் திரும்பி சென்றது. காளையின்கால் பதிந்த இடங்களிலெல்லாம் லிங்கங்கள் இல்லையென்றும் அவ்வழியே வந்து தரிசிக்கலாம் என்றும் அசரீரியாக கேட்டது.
காளை வந்து வழி காட்டியதால் இவ்வூருக்கு காளையார் கோவில் எனப் பெயர் வந்தது.
பண்டாசுரன் எனும் அசுரன் அனைவரையும் இம்சித்து வந்தான். அவனால் துன்பப்பட்ட தேவர்கள் சிவபெருமானிடத்து சென்று முறையிட்டனர். அந்த தருணத்தில் பார்வதிதேவி தனது கைகளால் சிவனாரின் கண்களை பொத்தி விளையாடினார். உலகம் இருண்டது. கோபம் கொண்ட சிவபெருமான் அவளை காளியாக மாற சபித்து பூமிக்கு அனுப்பினார்.
காளி உருவம் கொண்டு பூலோகம் வந்த உமையவள், இந்திராதி தேவர்களை துன்புறுத்தி வந்த பண்டாசூரனை வதைத்து வெற்றி வாகை சூடினாள். சிவபெருமான் அன்னையை காளியாக மாற்றி பூலோகம் அனுப்பிய நோக்கமும் நிறைவேறியது.
இத்தலத்து இறைவனை வழிபட்டு காளி வடிவமும் கரிய நிறமும் நீங்கப் பெற்றாள். பின்னர் ஸ்வர்ணவல்லியாக மாறி இறைவனை மணந்தாள். காளியாக இருந்த உமையன்னையை மணந்ததால் இறைவனுக்கு காளீஸ்வரன் என்ற பெயர்.
சந்திரன் கொண்ட சாபத்தை போக்கியருளியவர் சோமேசர்.
காளீஸ்வரர் கோவில் திருப்பணியில் முழுமையாக தன்னை தருவதாக முன்னமேயே வாக்களித்திருந்தால் மீனாட்சி சமேதரராக சுந்தரேஸ்வரர் எழுந்தருளி அருள் புரிகின்றார். இதனால் காரண லிங்கம் என்பார்கள்.
நந்தி தேவரின் வாலைப் பிடித்திழுத்து நந்தியின் சாபத்திற்கு ஆளான ஐராவதம், காட்டானையாக மாறி சாப விமோசனம் இங்கு வந்தது. இங்குள்ள ஆனை மடுவில் மூழ்கி காளீஸ்வரரை வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றது.
பெரிய கோபுரத்தை கட்டியவர்கள் மருது சகோதரர்கள். பெரிய மருது சரணடையாவிட்டால் கோபுரத்தை தகர்ப்பேன் என வெள்ளைக்கார தளபதி கூறவே, கோபுரத்தைக் காப்பாற்ற சரணடைந்தார் பெரிய மருது எனக் கூறப்படுகிறது.
தேவாரத்திருத்தலம்