வேதவித் என்ற அந்தணன் மாதா, பிதா, குரு ஆகியோர்க்கு பணிவிடை செய்து கொண்டும், ஜபதபங்கள் செய்து கொண்டும் ஒழுக்கசீலனாக வாழ்ந்து வந்தான். ஸ்ரீமந் நாராயணனை குறித்து தவம் மேற்கொண்டான்.
சிரத்தையாக தவம் செய்ததின் பயனாக அவன் முன் பிரத்யட்சமான எம்பெருமானிடம், இத்தலத்திலேயே எழுந்தருளி சேவார்த்திகளுக்கு அருளுமாறு வேண்டியதின்பேரில், இங்கேயே கோவில் கொண்டார் என ஸ்தல வரலாறு.
அக்னி பகவான், உரோமச முனிவர், உரோமச முனிவரின் சீடர், சத்யவான் ஆகியோர்க்கு பிரத்யட்சம் ஆனதாக ஐதீகம்.
அகநாச தீர்த்தக் குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த செம்படவன் ஒருவனை கொடிய நாகம் ஒன்று தீண்டியதால் அவன் இறந்தான். அவனது சரீரத்தை பட்சிகள் புசிக்க, ஆத்மா சொர்க்கலோகம் சென்றது.
ரோமச முனிவரிடம் இதன் காரணத்தை கேட்டான் அவரது சீடனான சத்யவான். அவனது முன்வினை தீய பயனால் அவன் அழிந்தான் என்றும், வரகுணமங்கையில் பிறந்ததால் சொர்க்கம் சென்றான் எனவும் உரோமச முனிவர் கூறினார்.