திருவிடைமருதூரைச் சேர்ந்த சேஷாத்ரி சாஸ்திரிகளின் குமாரன் மஹாலிங்கம் குழந்தைப் பருவத்தில் இருந்தே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினான். காஞ்சி சங்கர மடத்தின் 64வது பீடாதிபதியானவர், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்கு தாடங்க பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகளை செய்தார். அதன் வைதீக கார்யங்களை கவனிக்க மகாலிங்கத்தை அனுப்பினார்.
பல பண்டிதர்கள் கலந்து கொண்ட பெரிய நிகழ்வில் ஒரு இளைஞன் சாதுர்யமாக கார்யங்களை சிரமேற் கொண்டு முடித்ததில் மகிழ்ச்சியுற்ற பீடாதிபதி, தனக்குப் பிறகு பீடாதிபதியாக தகுதியானவன் இவன் என முடிவெடுத்தார்.
65வது பீடாதிபதியாக பொறுப்பேற்ற மகாலிங்கம் மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் எனும் தீட்சா நாமத்துடன் காஞ்சி மடத்தின் புகழைப் பரப்பினார். பின்னர் க்ஷேத்ராடனம் புறப்பட்ட ஸ்வாமிகள் இவ்வூர் வந்து சேர்ந்தார். நித்ய கல்யாணி - கைலாசநாதரை தினமும் தரிசிக்க ஏதுவாக நகரத்தார்கள், ஸ்வாமிக்கு தங்க இடமும், சிவபூஜைக்கு ஏற்பாடும் செய்து தந்தனர்.
நகரத்தாருக்கு சொந்தமான ஒரு குறிப்பிட்ட இடத்தை (முட்செடி புதர்களை கொண்டது) தனக்கு வேண்டுமென கேட்டார். ஸ்வாமி தனது இறுதி நாட்களில் இருப்பதை அவர்கள் அறியவில்லை. அன்றிலிருந்து 3ம் நாள் (20.3.1890) ஸ்வாமிகள் முக்தி அடைந்தார். அவர் குறிப்பிட்டு கேட்ட இடத்தையே அவரது அதிஷ்டானமாக உருவாக்கியுள்ளனர்.