சரஸ்வதியின் துணை இல்லாமல், பிரம்மா காஞ்சிபுரத்தில் செய்த யாகத்தை அழிக்க சரஸ்வதி, வேகவதி நதியாக உருவெடுத்து ஓடி வந்தாள். பின்னர் திருமாலின் அருளால் சரஸ்வதியின் கோபம் தணிந்து சரஸ்வதி பணிந்தாள் - யாகமும் பூர்த்தியானது.
சரஸ்வதி யாகத்தைத் தடுக்க செய்த முதல் முயற்சி பள்ளிக்கொண்டாவில், இரண்டாவது இவ் ஊரான திருப்பாற்கடல், மூன்றாவதாக முயன்று தோல்வி கண்ட இடமே திருவெக்கா என ஸ்தல புராணம் கூறுகிறது.
அதே கோலத்தில் க்ஷீராப்திநாதனாக திருமால் இங்கு பக்தர்களுக்கு காட்சி தருவதால், இவ் ஊரை திருப்பாற்கடல் என்கின்றனர்.
கலியுகத்து மக்களின் பாவக்கணக்குகளை எடுத்துக்கூறும் சித்ரகுப்தனுக்கு, கபால சூடு ஏற்பட்டு, அதை தணிக்க, பிரம்மா கூறிய யோசனைப்படி, இத்தலத்திற்கு வந்து, அத்தி சமித்துக்களைக் கொண்டு ஹோமம் செய்து ரங்கநாதரை வழிபட்டு, அவர் அருளால், நோய் நீங்கப் பெற்றதாக ஸ்தல புராணம் தெரிவிக்கின்றது.
பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் மற்றும் ரங்கநாதர் சேவை சாதிக்கும் இரட்டைக் கோவில் என்பார்கள்.