சபரிமலை தந்திரியின் ஆலோசனைப்படி உருவாக்கப்பட்ட திருவுருவம். சபரிமலையில் இருப்பது போலவே
கர்ப்பக்கிரஹமும் அமைந்துள்ளதால் நல்ல ஆகர்ஷண சக்தி வெளிப்படுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
கேரளாவிலிருந்து பணிக்கர்களை வரவழைத்து பிரசன்னம் பார்த்ததில், இக்கோவில் மலையடிவாரத்தில்
அமையும் என்று சொன்னார்களாம். மேலும் பிரசன்னத்தின் மூலமாக சிவன்மலைக்கும் திருநீர் மலைக்கும்
இடையே அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டதாம். அதன்படியே சங்கர் நகரில் அமைந்தது தெய்வ சங்கல்பம்
என்கின்றனர்.
திருப்புணித்துறையைச் சேர்ந்த ஆர்யன் நம்பூதிரியைக் கொண்டு ஆகம முறைப்படி பிரதிஷ்டைகளைச்
செய்துள்ளதாகக் குறிப்பொன்று கூறுகிறது.
சங்கடஹர சதுர்த்தி பூஜை, கணபதி ஹோமம் செய்கின்றனர். வெள்ளிக்கிழமைகளில் பகவதி சேவை
மற்றும் லலிதா சஹஸ்ரநாம பாராயணம், ஸ்ரீ தர்மசாஸ்தாவிற்கு அஷ்டாபிஷேகம், புஷ்பாபிஷேகம்,
நீராஞ்சனம், ஜலதாரை, நெய்விளக்கு ஆகியனவும் ஹோமங்களும், ஸ்ரீ குருவாயூரப்பன் சந்நிதியில்
அன்னப்பிராசனம் மற்றும் துலாபாரம் ஆகியனவும், மாதாந்தோறும் ஆயில்ய நட்சத்திரத்தன்று
ஸ்ரீ நாகராஜாவிற்குப் பாலபிஷேகமும் செய்கின்றனர்.