சண்பை எனப்படும் ஒரு வகை புல் மிகுந்து காணப்பட்டதால், இவ்வூரை சண்பை என்று அழைத்தனர். காலப்போக்கில் அதுவே ஜம்பை என்றானது.
ஆற்றினுள் உள்ள சிறிய மடு ஒன்றில், சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தை, வாளைமீன் ஒன்று சுற்றி சுற்றி வந்து பூஜித்ததாம். சித்தர் ஒருவரே மீன் வடிவில் இருப்பதாக கூறுவர்.
யானை ஒன்று மடுவில் இறங்கி கலக்கி நீரை சேறாக்கியது. சிவலிங்கத்திற்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக எண்ணி கோபம் கொண்ட வாளை மீன், தனது வாலால் யானையை ஓங்கி அடித்தது.
காயம்பட்டு வந்த யானையை கவனித்த அரசன், மடுவிற்கு சென்று ஆராய்ந்ததில், மடுவிற்குள்ளிருந்த சிவலிங்கம் கிடைத்தது. அதை வெளிக்கொணர்ந்து, பிரதிஷ்டை செய்து, கோவில் ஒன்றை நிர்மாணித்தான். நீர்நிலையின் உள்ளே கிடைத்ததால் ஜம்புகேஸ்வரர் என்று பெயர்.