சிவபெருமானை அழைக்காது தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்ட தவற்றை செய்தமைக்காக சாபத்தையும் பெற்று, பதவியையும் இழந்த பிரம்மன், விமோசனம் தேடி பூலோகம் வந்து, சிவ க்ஷேத்திரங்கள் பல சென்று வழிபட்டுக் கொண்டிருக்கையில், அவருடைய பேரனான உரோமச மகரிஷி பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்த இவ்விறைவனான ஸ்ரீ கைலாசநாதரை வழிபட்டு தன்னை மன்னித்தருளும்படி பிரார்த்தித்தார்.
பிரத்யட்சமான சிவபெருமான் பிரம்மனின் சாபத்தைப் போக்கி, அவர் இழந்த பதவியையும் மீண்டும் அவருக்கே தந்து அருளாசி வழங்கினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
ஸ்ரீ காசி விஸ்வநாதர், ஸ்ரீ அண்ணாமலையார், ஸ்ரீ சுந்தரேஸ்வரர், ஸ்ரீ பதரிவனேஸ்வரர், ஸ்ரீ கைலாசநாதர் ஆகிய ஐந்து லிங்கமூர்த்தங்கள் எழுந்தருளியிருப்பதால் இதை பஞ்சலிங்க க்ஷேத்திரம் என்று அழைக்கின்றனர்.
வேதங்களை ஓதும் அந்தணர்களுக்கு இந்த கிராமத்தை தானமாக வழங்கி, இவ்வாலயத்தைக் கட்டித் தந்தான் ராஜ ராஜ சோழன் என குறிப்பொன்று கூறுகிறது. ஊருக்கு ராஜராஜ சதுர்வேதி மங்கலம் என்ற பெயரையும் சூட்டி மகிழ்ந்தான் ராஜ ராஜ சோழன்.
திருக்குற்றால ஸ்தல புராணப்படி, நவகயிலாயங்களில் முதன்மையானது பிரம்மதேசம் எனக் கூறப்பட்டுள்ளது. உத்ராயண - தட்சிணாயண காலங்களில் சூரியனின் பாதை மாறுபடும். ஆனால் இங்கு இரண்டு காலங்களிலும் சூரியனின் ஒளிக்கதிர்கள் ஸ்வாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்வதால் இதை சூரிய ஸ்தலம் என்று கூறுவார்கள்.
காஞ்சி காமகோடி மடத்து பீடாதிபதிகளுள் ஒருவரான ஸ்ரீ சர்வக்ஞாத்மேந்திர சரஸ்வதியின் அவதார ஸ்தலம்.
தேவார வைப்புத்தலம் - பஞ்சலிங்க க்ஷேத்திரம்.