பஞ்சபூத ஸ்தலங்களுள் வாயு ஸ்தலமாக விளங்குகின்றது.
முருகன் பிறப்பதற்கு முன்பாக மன்மதன் இத்தலத்து இறைவனை வழிபட்டதால் காமநாதீஸ்வரர் என்று பெயர் கொண்டார். ரதி தேவியோடு வந்து இவ்விறைவனை வழிபட்ட ஸ்தலம். ஊரைச் சுற்றி ஆறு, அகழிகள் இருந்ததால் ஆறகமூர் எனப் பெயர் கொண்டது.
வீதிவுலா சென்ற இறைவன் கோவிலுக்கு திரும்ப தாமதமாகிறதென அம்பிகை கோபம் கொண்டு, கோவில் கதவை சாத்தி விடுவார். ஆருத்ரா தரிசனம் அன்று, ஊர்வலம் முடித்த ஈஸ்வரன், கோவிலுக்கு திரும்புகையில் வழி நெடுக பெண்கள் ஆரத்தி எடுப்பதால் கோவிலுக்கு திரும்ப காலதாமதமாகி விடும்.
கூட வந்த அர்ச்சகர்களும் ஊர் பெரியவர்களும் சமாதான தூது போவார்கள். கால தாமதத்திற்கான காரணத்தை விளக்குவார்கள்.
அம்பிகை சார்பில் ஒரு சாராரும், ஸ்வாமிக்காக ஒரு சாராரும் வாதத்தில் வாதம் முற்றி, வாழை மட்டையால் அடித்துக் கொள்வது போன்ற சுவாரஸ்யமான ஊடல்கள் ஏற்படும். பின்னர் கதவு திறக்கப்பட்டு ஸ்வாமி உள்ளே செல்வார்.
தேய்பிறை அஷ்டமி தினங்களில் நள்ளிரவு 12 மணிக்கு பைரவ பூஜை செய்கின்றனர். ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் புனுகு சாத்தி, உளுந்து வடை மாலை, முந்திரி மாலை ஆகியன சாத்தி, வெல்லம் கலந்த பாயாசம் மற்றும் தயிரன்னம் நைவேத்தியம் செய்கின்றனர். செந்நிற ஆடை, செவ்வரளி பூக்கள், வெண் பூசணி - நெய் தீபம் உகந்தது.