காசியிலுள்ள விஸ்வநாதரைப் போல இங்குள்ள இறைவன் இருப்பதாலும், கங்கையின் புனிதத்தை இங்குள்ள தீர்த்தம் கொண்டுள்ளதாலும், காசியில் இருப்பது போன்ற மயானம் இங்கிருப்பதாலும் இவ்விறைவனை காசி விஸ்வநாதர் என்றழைக்கின்றனர்.
உமாதேவி குடி கொண்ட ஊர் என்பதால் ஆதியில் உமாபுரம் என்றழைக்கப்பட்டது. உமையாள்புரம் என்று தற்போது அழைக்கப்படுகிறது.
பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாமல் விழித்த பிரம்மனை சிறைப்பிடித்த முருகப்பெருமானை சந்தித்து உபதேசம் பெற ஸ்வாமிமலைக்கு வந்து கொண்டிருந்தார் (சிவன்).
'பரிவாரங்களுடன் வரக்கூடாது, தனியாகவே வர வேண்டும்' என முருகனிடமிருந்து செய்தி வந்தது.
திருவையாற்றிலிருந்து பரிவாரங்களுடன் புறப்பட்ட தனது ஏகாதச ருத்ராம்சங்களை பைரவர் என்கிற ஸ்வரூபத்தில் அடக்கி, அருகிலுள்ள வைரவன்கோயில் எனும் கிராமத்தில் விட்டு விட்டார். ஈஸ்வர அம்சமான சந்திரனை திங்களுரிலும், கணபதி அக்ரஹாரத்தில் விநாயகரையும், நந்தி தேவரை மணலூரிலும் விட்டுவிட்டு கடைசியாக உமையவளை இவ்வூரில் தங்க வைத்தார்.
இங்கு கோவில் கொண்ட உமையவளே குங்குமசுந்தரி எனப் போற்றப்படுகின்றாள்.
விஜயா எனும் கந்தர்வப் பெண் ஒருத்தி உமையவளுக்கு கோவில் கட்டும் ஆசையை, உமையவளிடமே தெரிவித்து, உமையவள் காட்டிய இடத்தில் (இவ்வூர்) தீர்த்தம் ஒன்றை அமைத்து, விஸ்வகர்மாவின் உதவியுடன் இவ்வாலயத்தை நிர்மாணித்ததாக ஸ்தல வரலாறு.
நார்யா குளம் எனப்படும் விஜயாதீர்த்தம் ஆலயத்தின் தென்புறமாக உள்ளது.
இங்குள்ள மயானத்தில் வெட்டியான்கள் இல்லை. இறந்த உடல்களை கொண்டு வரும் அந்தணர்களே வெட்டியான்கள் செய்ய வேண்டிய வேலைகளையும் செய்கின்றனர். காவல்காரப் பிள்ளையார் எனப்படும் மங்கள சித்தி விநாயகர் மயானமருகே எழுந்தருளியுள்ளார். இவருக்கு காணிக்கை செலுத்துகின்றனர்.
பௌர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமை தினங்களில் அம்பிகையை தரிசித்து குங்கும அர்ச்சனை செய்வது விசேஷம்.
வைகாசி விசாகத்தின்போது திருக்கல்யாண உற்சவம் சிறப்புற நடக்கும். திருமணப்பேறு வேண்டி பிரார்த்திக்கும் பக்தர்கள், கல்யாணத்திற்கு வேண்டியவைகளை செய்கின்றனர்.