ஸ்ரீமந் நாராயணனைக் குறித்து காஞ்சியம்பதியில் அஸ்வமேத யாகம் மேற்கொண்ட பிரம்மனின் யாகத்தைத் தடுத்து அழிக்க வேகவதியாய் வேகமாக வந்தாள் சரஸ்வதி தேவி. அணையாய் சயனித்து வேகவதியை நாராயணன் தடுத்ததால் அந்தர்வாஹினியாக மறைந்தாள். பின்னர் பல வழிகளிலும் முயன்று, தடுக்க முடியாது போனதால் காபாலிகாஸ்திரத்தைப் பிரயோகித்து, அதிலும் தோல்வியைத் தழுவினாள்.
பிரம்மனின் யாகம் இனிதாக முடிய, யாகத்தீயில் தோன்றி அருள்புரிந்தார் ஸ்ரீ நரசிம்மர். பிரம்மன் வேண்டிக்கொண்டபடி அதே கோலத்தில் இங்கே எழுந்தருளி சேவை சாதிக்கின்றார் என ஸ்தல வரலாறு.
ஸ்ரீ நரசிம்மர் ஹஸ்திசைல குகையிலிருந்தபடியே வேறொரு நரசிம்ம வடிவம் கொண்டு மேற்குத் திசையில் அசுரர்களைத் துரத்தி, மீண்டும் அவர்கள் வராமலிருக்க இங்கேயே யோக நரசிம்மராய் அமர்ந்தார்.
'வேள்' என்றால் ஆசை என்று அர்த்தம். நரசிம்மர் ஆசையாக இங்கு எழுந்தருளியதால் 'வேள் இருக்கை' எனப் பெயர் கொண்டு, பின் நாளடைவில் மருவி 'வேளுக்கை' என்றாயிற்றாம்.
கிரக தோஷங்கள் நீங்கவும், தீவினைகள் அகலவும் இவருக்கு பானகம் நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர். பிரதோஷ வழிபாடு சிறந்தது. அமாவாசை தினங்களில் நடைபெறும் திருமஞ்சன நீரை தெளித்துக் கொண்டால் தீவினைகள் நம்மை அண்டாது என பட்டாச்சாரியார் தெரிவிக்கின்றார்.
இது 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.