சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய தீப்பொறிகள் விழுந்த தாமரை மலரில் உதித்த குழந்தை முருகனுக்கு பாலூட்ட மறுத்த தனது மனைவி அருந்ததியை வசிஷ்டர் சபித்து விட்டார். அருந்ததியை சபித்த வசிஷ்டரை முருகப் பெருமான் தண்டித்தார். வசிஷ்டர் - அருந்ததி இருவரும் விராலிமலைக்கு வந்து தவமிருந்து முருகனின் அனுக்ரஹத்தைப் பெற்றனர்.
பிரம்மனை தண்டித்த சிவபெருமானை நிந்தித்த நாரதர், பல துன்பங்களை சந்தித்து, சிவ அபராத செயலை போக்கிக் கொள்ள விராலிமலை வந்து வழிபட்டு பிராயச்சித்தம் தேடிக் கொண்டார். சூரபத்மனை மகனாக பெற்றதற்காக மனம் வருந்திய காச்யபர் விராலிமலை வந்து முருகனை வழிபட்டு மனசாந்தி பெற்றார்.
வரோதயன் எனும் சிறுவன் பள்ளிக்குப் போகாமல் விராலிமலைக்கு வந்து முருகனின் சிலைக்குப் பின்னால் ஒளிந்து கொள்வான். முருகனருளால் அவன் புலமை அடைந்து ஞானவரோதயன் ஆனான்.
பாளையக்காரர்களின் பிரதிநிதியான கருப்பமுத்து இத்தலம் வந்து வழிபட்டுக் கொண்டிருக்கும்போது இங்கு ஓடும் மாமுண்டி நதியின் வெள்ளப் பெருக்கில் சிக்கிக் கொண்டான். உணவு ஏதும் கிடைக்கவில்லை. குளிரைப் போக்கிக் கொள்ள சுருட்டு பிடிக்காமல் இருக்க முடியாது என்ன செய்வது? எனப் புலம்பினான். அவன் முன் தோன்றிய முருகன் சுருட்டும் நெருப்புக்குச்சியும் கொடுத்தார். இதனால் இன்றளவும் முருகன் சந்நிதி முன்பாக சுருட்டு வைத்து நைவைத்யம் செய்வதாக கூறப்படுகிறது.
குரா மரங்கள் வடிவில் முனிவர்கள் விரவியிருந்து முருகனை பூஜித்ததால் விராலிமலை எனப் பெயர் கொண்டதாக கூறுவர். விராலி எனும் மூலிகை செடிகள் மிகுந்து காணப்பட்டதால் விராலிமலை என்பாரும் உண்டு. சதிர் எனும் ஒரு வகை ஆட்டத்தை ஆடும் தேவதாசிகளை விறலியர்கள் என்பார்கள். அவர்கள் நிறைந்திருந்த ஊர் என்பதால் விராலிமலை ஆனதாக கூறுவோரும் உண்டு.