வேதசாரன் - குமுதவல்லி எனும் பிராமண தம்பதியினர், எம்பெருமானிடம் குழந்தைப்பேறு வேண்டி நின்றனர். அலர்மேல்மங்கைத் தாயாரே அவர்களுக்கு மகளாக அவதரித்து கமலாவதி என்ற பெயரில் வளர்ந்து வந்தாள். வேங்கடவாணனையே மணந்து கொள்ள விரும்பி தவம் மேற்கொண்டாள். பிரத்யட்சமான ஸ்வாமி, அவளை ஏற்றுக்கொண்டு தனது கௌஸ்துப மணிமாலையோடு ஆலிங்கனம் செய்து கொண்டார். அதிலிருந்து பரந்தாமனின் மார்பில் தாயார் அமர்ந்து காட்சி தருகிறாள்.
அசுரன் ஒருவன் வேதசாரனின் மனைவி குமுதவல்லியை கவர்ந்து கொண்டு சென்று ஒரு குகையில் ஒளித்து வைத்து விட்டான். செய்வதறியாது திகைத்த வேதசாரன் பெருமாளை சரண் அடைந்தான். பக்தனுக்காக கருடன் மீது ஏறி பயணித்தார் ஸ்வாமி. ஸ்வாமிக்கு துணை என்றும் நான்தானே என்ற எண்ணம் கருடனுக்கு தோன்றவே, தனது கால் இடுக்கில் கருடனை வைத்துக் கொண்டு பயணித்தார். கருடனின் கர்வமும் அடங்கியது. பின்னர் குமுதவல்லியை சிறை மீட்டுக் கொண்டு வந்து வந்தார்.
இதை அறிந்த அசுரன் திருக்குளந்தைக்கு வந்து பெருமாளோடு போரிட்டான். அவனை பொருநை ஆற்றின் கரையில் தள்ளி அவனது தலை மீது ஏறி கூத்தாடினார். இதனால் மாயக்கூத்தன் என்ற திருநாமம் கொண்டார்.
இப்பகுதியில் பெருங்குளம் ஒன்று உள்ளது. இக்குளத்திலிருந்து பார்த்தால் சூரியன், பெருமாள், சிவபெருமான் ஆகிய மூவரையும் தரிசிக்கலாம்.
"ஆதித்யம் அம்பிகாம் விஷ்ணும் கணநாதம் மகேஸ்வரம் பஞ்ச தேவா ஸ்மரேந்நித்யம் மகாபாப நாசனம்" என்ற ஸ்லோகம் பெருங்குளத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.