துளசி தேவி இத்தலத்தில் துளசி செடியாகத் தோன்றி தவம் இருந்தமையால், இத்தலத்தை துளசிவனம் என்று புராணங்கள் கூறுகின்றன.
இத்தலத்தில் தவம் மேற்கொண்டிருந்த மார்க்கண்டேய மகரிஷி, துளசி வனத்தில் குழந்தை வடிவில் அவதரித்த திருமகளை கண்டெடுத்தார். பூமியிலிருந்து தோன்றியதால் பூமி தேவி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார்.
வயதான பிராமணனின் தோற்றம் கொண்டு அங்கு வந்த திருமால், அப்பெண்ணை தனக்கு மணம் முடித்து வைக்கும்படி கேட்டார். தன்னுடைய மகள் ஏதுமறியா சிறுமி என்றும், அவளுக்கு சமையல் தெரியாது என்றும், அன்னம் - காய்கறி ஆகியவற்றுள் உப்பிடத் தவறிடவும் கூடும் என்றும் கூறி தட்டிக்கழிக்கப் பார்த்தார் மகரிஷி.
'உப்பில்லாத உணவினை விருப்பத்துடன் உண்பேன், எனக்கு மணம் முடித்து வையுங்கள்' எனக் கூறி தனது சுயரூபத்தைக் காட்டினார் திருமால். திருமாலை சேவித்து மகிழ்வுற்ற மார்க்கண்டேய மகரிஷி இருவருக்கும் திருமணத்தை இனிதே முடித்து வைத்தார். அதே கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.
இன்று வரை கோவிலில் உப்பில்லாத பண்டங்கள் படைக்கப்படுகின்றன. இதனால் உப்பிலியப்பன் என்று அழைக்கின்றனரோ? கோவிலுக்குள் பிரசாதம் சாப்பிடும்போது உப்பு சேர்த்த சுவையும், வெளியே எடுத்துப் போய் சாப்பிட்டால் உப்பில்லா சுவையுமாக மாறுவதும் இத்தலத்தின் சிறப்பு.
வைகுந்தப் பெருமாளே எழுந்தருளியுள்ளதாலும், தேவர்கள் ஒன்று கூடி திருமணத்திற்கு வருகை புரிந்து இவ்வுலகை தேவலோகம் போல் மாற்றியதாலும் திருவிண்ணகரம் எனப் பெயர் கொண்டதாகக் கூறுவர்.
பெருமாள் அவதரித்த நட்சத்திரமும், திருக்கல்யாணம் செய்து கொண்ட நட்சத்திர நாளான திருவோண தினத்தன்று பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். அன்று பகல் 11 மணி அளவில் வால்பந்தத்துடன் சிரவணதீபம் எடுப்பது விசேஷம்.
இங்கு சந்தான கிருஷ்ணனை மடியில் எழச் செய்யும் சேவை தினமும் காலை 8.30 மணி வரை நடைபெறும்.
உப்பு தவிர்த்து மீதி பொருட்களை துலாபார பிரார்த்தனையாக செலுத்தலாம்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று.