இத்தலத்திலுள்ள வேதபுஷ்கரிணியில் உள்ள தாமரை மலர் ஒன்றில் திருமகள் அவதரித்தாள். மதங்க முனிவர் குழந்தைக்கு மரகதவல்லி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். திருமண வயதை எட்டியதும், சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தார். பல மன்னர்கள் கலந்து கொண்ட சுயம்வரத்தில், மஹாவிஷ்ணுவும் ஒரு மன்னனைப் போல வேடம் பூண்டு கலந்து கொண்டார்.
மன்னனாக வந்த மஹாவிஷ்ணுவிற்கு மாலையிட்டாள் மரகதவல்லி. எதிர்த்த மன்னர்களை போரிட்டு ஜெயித்து, வீரநாராயணர் எனும் பெயர் கொண்டு, பின்னர் மரகதவல்லியை மணந்து, மன்னனார் என்ற பெயர் கொண்டார். திருமகளை மயக்கி மணந்து கொண்டவர் என்பதால் அழகிய மணவாளன் ஆனார்.
யாத்திரையாக வந்த சேவார்த்திகளில் சிலர், வீர நாராயணப் பெருமாளின் சந்நிதி முன்பாக அமர்ந்து, ஓராயிரத்துள் இப்பத்தும் என்று முடியும் நம்மாழ்வாரின் பாசுரத்தை பாடினார்கள். இந்த பாசுரங்களினால் அவர்களை அணுகி, தமக்கு அந்த ஓராயிரம் பாசுரங்களும் வேண்டும் எனக் கேட்டார்.
தங்களுக்கு பத்து பாசுரங்கள் மட்டுமே தெரியுமென்றும், நம்மாழ்வாரின் சீடரான மதுரகவி ஆழ்வார் இயற்றிய 'கண்ணினுள் சிறுத்தாம்பு' என்ற பாடலை, நம்மாழ்வார் சந்நிதி முன்பாக அமர்ந்து, பன்னிரெண்டாயிரம் முறை ஜெபித்தால், மீதி ஆயிரம் பாசுரங்கள் கிடைக்க வழி இருப்பதாகவும், சேவார்த்திகள் தெரியப்படுத்தினார்கள்.
உடனே ஆழ்வார் திருநகரி விரைந்து சென்ற நாதமுனி, அவ்வாறே செய்து, நம்மாழ்வாரை தரிசித்து, சேவித்து, ஆயிரம் பாசுரங்களையும், மற்ற ஆழ்வார்களின் பாசுரங்களையும் பெற்றுத் தந்தார் என ஸ்தல வரலாறு. பாசுரங்களை மீட்டுத் தந்த நாதமுனிகளின் அவதார ஸ்தலம். மறைந்து போன பிரபந்தங்களை வெளிப்படுத்தியது மன்னனார் என்பதால், இவ்வூருக்கு காட்டும் மன்னார் என பெயர் வந்தது. காலப்போக்கில் காட்டுமன்னார்கோவில் என்றானதாகக் கூறுவர்.