யாகத்தை தவிர வேறு தெய்வம் ஏதுமில்லை - வேள்வியினால் எதையும் சாதிக்கலாம், என்ற மமதையில் இருந்த தாருகாவனத்து முனிவர்களின் கர்வத்தை அகற்றி, உண்மையை உணர்த்துவதற்காக சிவபெருமான் பிட்சாடனராகவும், திருமால் மோகினியாகவும் வேடம் பூண்டு தாருகாவனத்தை நோக்கி புறப்பட்டனர்.
திகம்பரராக திருமேனி கொண்டு ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும் வந்த பிட்சாடனரின் பேரழகையும் வாலிப வனப்பையும் பார்த்து மயங்கிய ரிஷி பத்தினிகள் அவரை பின் தொடர்ந்தனர். மோகினி வடிவத்திலிருந்த திருமால், ரிஷிகளின் யாகசாலை பக்கமாக சென்று ஆடிப்பாடினார்.
நாங்கள் தவம் செய்யும் இடத்திற்கு ஏன் வந்தீர்கள்? என ரிஷிகள் கோபத்துடன் வினவ, நானும் என் மனைவியுடன் தவம் செய்யவே வந்தேன் என வேடிக்கையாக கூறினார் திகம்பரர். மற்றவர்களை மயக்கி ஆடிப்பாடுவது தான் உங்கள் லட்சணமா என்று கேட்ட ரிஷிகளைப் பார்த்து - யாக கார்யங்களை விட்டு விட்டு எங்களையே பார்த்துக் கொண்டிருக்கும் நீங்களும் உங்கள் பத்தினிகளும் அடக்கமில்லாதவர்கள் என்று அவர்களின் தவறுகளை சுட்டிக் காண்பித்தார் திகம்பரர்.
தாங்களும் தங்களது மனைவிமார்களும் கேலிக்கு உள்ளானதால் அவமானம் கொண்ட ரிஷிகள் கோபம் கொண்டு, உக்ர மயமான மந்திரங்களை ஓதி அபிசார வேள்வி செய்தனர். அதிலிருந்து புறப்பட்டு சுழன்று வந்த நெருப்பு கோளத்தை பெருமான் தனது இடது கரத்தில் ஏந்திக் கொண்டார். அடுத்து ஏவப்பட்ட பாம்புக் கூட்டத்தை அணிகலன்களாக ஏற்றுக் கொண்டார். பின்னர் வந்த புலியை அழித்து சார்த்தூலஹரர் எனப் பெயர் கொண்டார்.
வலிமையான பூதத்தை அவர்கள் ஏவ, அதை ஏவலனாக்கிக் கொண்டார். குட்டையான பூதம் ஒன்று கிளம்பி வர (முயலகன்) அதை திருவடியின் கீழ் அமர்த்தி நடனமாடினார். கடைசியாக வந்த முரட்டு யானையை, அணி மா சித்து மூலமாக அதன் உடலுள் புகுந்து, அதன் தோலைக் கிழித்து, உரித்து போர்த்திக் கொண்டார்.
வழுவை என்பதற்கு யானை என்று ஒரு பொருள் உள்ளது. வழுவை (யானையை) உரித்த ஊர் என்பதால் வழுவூர் என்றானது.
அஷ்ட வீரட்டானங்களுள் ஒன்று - தேவார வைப்புத் தலம்.