மூலவர்: வால்மீகீஸ்வரர், அம்பாள்: வடிவுடையம்மை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் பாலிப்பவர் வால்மீகீஸ்வரர். சப்த ரிஷிகளுள் ஒருவரான வால்மீகி முனிவர் வழிபட்டு பூஜித்த லிங்கம் என்பதால் வால்மீகீஸ்வரர் எனப் பெயர் கொண்டார். அன்னை வடிவுடையம்மை பெயருக்கேற்ற வடிவும் அழகும் கொண்டவள். ஸ்ரீ அழகுடைய அம்பாள் என்றும் அழைக்கப்படுகிறாள். வால்மீகி முனிவரின் சிலை உள்ளது. ஸ்ரீ நாகவல்லி, இரட்டை விநாயகர், ஸ்ரீ முத்துமாரி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். சிறப்பு மூர்த்தமாக கபால பூஷண பைரவர் எழுந்தருளியுள்ளார். கபால பூஷண பைரவரை வழிபடுவோர்க்கு சௌபாக்கியங்களும் கிட்டும் எனக் கூறப்படுகிறது.
சிவபெருமான்-பார்வதி தேவியின் திருமணக் காட்சியை காண காஞ்சிபுரம் வந்த ரிஷிகளும், முனிவர்களும் தத்தம் நித்ய பூஜா அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்க அமைதியான இடம் தேடினார்கள். காஞ்சிபுரத்தில் கூட்டமாக இருந்ததால், சற்றுத் தள்ளி வந்து இத்தலத்தில் அமர்ந்து வழிபாடுகளை நடத்தினர் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
ஆறு ரிஷிகள் வெவ்வேறு இடங்களில் தங்கி பூஜைகளை மேற்கொண்டனர். இந்த ஆறு இடங்களை உள்ளடக்கிய வனப் பகுதிகளுக்கு ஷடாரண்யம் எனப் பெயர். தமிழில் ஆற்காடு என்பர்.
எட்டி மரம் எனப்படும் விஷ விருட்சங்கள் மிகுந்து காணப்பட்டதால் இவ்வூர் விஷாரம் என்றழைக்கப்பட்டு தற்போது மேல்விஷாரம் என்றழைக்கப்படுகிறது.
ஷடாரண்ய க்ஷேத்திரங்கள்: வன்னிவேடு - அகஸ்தீஸ்வரர் - அகஸ்தியர், குடிமல்லூர் - அத்ரீஸ்வரர் - அத்ரி மகரிஷி, நாவ்லாக் - காஸ்யபேஸ்வரர் - காஸ்யபர், காரை - கௌதமேஸ்வரர் - கௌதமர், வேப்பூர் - வசிஷ்டேஸ்வரர் - வசிஷ்டர், மேல் விஷாரம் - வால்மீகீஸ்வரர் - வால்மீகி, புதுப்பாடி - பரத்வாஜீஸ்வரர் - பரத்வாஜர்.
சப்தரிஷிகள் ஸ்தாபித்து வழிபட்ட இந்த ஏழு சிவலிங்க மூர்த்தங்களையும், இந்த ஏழு ஸ்தலங்களுக்கும் சென்று, ஒரே நாளில் தொடர்ச்சியாக, சிவராத்திரி அன்று தரிசிப்பது புண்ணியமாகும். பாலாற்றின் வடகரையில் நான்கும், தென்கரையில் மூன்றும் உள்ளன.
இவைகளே சப்தாரண்ய க்ஷேத்திரங்கள் எனப்படும்.