குரங்கு வடிவத்தில் வாலியும், அணில் வடிவம் கொண்ட இந்திரனும், முட்டம் வடிவில் யமனும் (முட்டம் என்றால் காகம்) சிவபெருமானை இங்கு வழிபட்டதால், இவ்வூர் குரங்கணில்முட்டம் எனப் பெயர் பெற்றது. கோவிலின் வாசலில் - குரங்கு பூஜிப்பதை வடபாலும், அணிலும் - காக்கையும் பூஜிப்பதை தென்பாலும் சுவர் சிற்பங்களாக காட்டியுள்ளனர்.
ரிக்ஷரஜசு என்னும் குரங்கு ஆணாக இருந்து பின்னர் பெண்ணாக மாறியது. ரிக்ஷரஜசுவுக்கும் இந்திரனுக்கும் பிறந்த வாலி குரங்கு வடிவம் கொண்டவன். பல சிவன் கோவில்களுக்கும் சென்று வழிபடுபவன் வாலி. இத்தலம் வந்ததும் இவ்விறைவனை பூஜித்து, குரங்கு ரூபம் நீங்கி, மனித உடலும், குரங்கு முகமும் பெற்றான் என ஸ்தல வரலாறு.
இந்திரனுக்கும் இவ்விறைவனை வழிபட ஆசை வந்ததால் அணில் வடிவம் கொண்டு, இங்கு வந்து இவ்விறைவனை பூஜித்து பிறவி நீக்கம் பெற்றான். அவ்வாறே யமனும் காக்கை வடிவம் கொண்டு இத்தலம் வந்து இவ்விறைவனை வழிபட்டு வினை நீக்கம் பெற்றான் என ஸ்தல வரலாறு.