விருட்சங்களும் மலைகளும் சூழப்பட்ட பிரதேசம் என்பதாலும், மாமலைப் போல வானளாவி நிற்கும் கோபுரத்தைக் கொண்டுள்ளதாலும் வானமாமலை என்று அழைக்கின்றனர். சர்வவியாபகனாகிய எம்பெருமான் ஞானமலை உச்சியில் இருப்பவர் என்ற பொருளில் 'வானமாமலையே' என்று ஆழ்வார் வர்ணித்துள்ளார்.
ஆதிசேஷன் தவம் மேற்கொண்டு வழிபட்ட ஸ்தலம் என்பதால் நாகணைசேரி எனப் பெயருற்றது. இங்கு உள்ள புஷ்கரிணி நான்கு ஏரிகளாக வெட்டப்பட்டதால் 'நான்கு ஏரி' எனப் பெயருற்றது. பின்நாளில் மருவி 'நாங்குநேரி' என்றானதாம். ஏரிக்கரைக்கு பின்னால் ஆலயம் உள்ளது. மற்ற மூன்று புறங்களிலும் வீடுகள் சூழ்ந்துள்ளன.
வரமங்கை என்ற பெயரில் இத்தலத்தில் வளர்ந்து வந்த மஹாலட்சுமி, பின்னர் தோத்தாத்ரிநாதனை மணந்து கொண்டதால் 'ஸ்ரீவரமங்கலநகர்' எனப் பெயர் கொண்டது.
கார்ய மஹாராஜா புத்ர பாக்யம் வேண்டி திருக்குறுங்குடி பெருமாளை பிரார்த்தித்தார். பெருமாள் கூறியபடி நாங்குநேரி வந்து இங்கு புதையுண்டிருந்த பெருமாளை வழிபடுவதற்காக வெளிக்கொணர வேண்டி பூமியை அகழ்ந்தார். தோண்டும் கருவி பட்டதில் ரத்தம் பெருக்கெடுத்தது. இதை நிறுத்த தைலாபிஷேகம் செய்து அந்த எண்ணெயை அருகிலிருந்த கிணற்றில் ஊற்றி விட்டாராம். எண்ணெய் திருமஞ்சனப் பழக்கம் அதிலிருந்து தொடர்வதாக குறிப்பொன்று கூறுகிறது. நன்றிக் கடனாக கார்யமஹாராஜா கட்டிய கோவில் இது என்பர்.
மது - கைடப அசுரர்களின் சம்ஹாரம் நிகழ்ந்தபோது அவர்களது ரத்தம் பூமியில் சிந்தியதால் ஏற்பட்ட துர்நாற்றத்தைப் போக்கிக் கொள்ளவும், தான் தூய்மையடையவும் பூமாதேவி இங்கு தவமிருந்தாள்.
சிந்து தேச அரசன் ஒருவன் அருகேயுள்ள குஸாஸன ரிஷியின் ஆஸ்ரமத்திற்கு வந்தான். ரிஷி இல்லாத சமயம் அவரது ஆஸ்ரமத்தில் வைத்திருந்த உணவையெல்லாம் சாப்பிட்டுவிட்டான். இதனால் கோபம் கொண்ட ரிஷி அவனை நாயாக போகுமாறு சபித்தார். இத்தலத்திலுள்ள சேத்துதாமரை புஷ்கரிணியில் நீராடி தனது சுய உருவத்தைப் பெற்றான்.
ஆதிசேஷனுக்கே முக்கியத்துவம் தருவதாகவும் தனக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் எனவும் கருடாழ்வார் பிரார்த்தித்துக் கொண்டதற்கிணங்க, வைகுண்டத்திலே தனக்கெதிரே நின்று கொண்டு தான் புறப்படும் போது தனக்கு வாகனமாக இருக்கும்படி அருள் புரிந்தார்.