ரிஷபாரூடராய் உலகை வலம் வந்து கொண்டிருந்த சிவபெருமான் இத்தலமருகே வந்ததும், ஸ்தலத்தின் சிறப்புகளை உமையவளுக்கு எடுத்துக் கூறினார். பிரளய காலத்தில் அழிவற்றது, 66 கோடி தலங்களுள் சிறந்தது, பஞ்சமா பாதகங்களையும் போக்க வல்லது, என்று மேலும் விளக்கினார். இதனால் அம்பிகை இத்தலத்தில் வசிக்க ஆசைப்பட்டாள். இதன் காரணமாக அம்பிகைக்கு வாழ வந்த நாயகி என்ற பெயர் வந்தது.
மாசி மாச சுக்ல பட்ச மக நட்சத்ர நாளில், சிவபெருமான் உமையவளோடு இங்கு எழுந்தருளியதாக புராணங்கள் கூறுகின்றன. மாசிமக உற்சவம் 10 நாட்கள் சிறப்பாக நடத்துகின்றனர்.
திருமாலுடன் ஏற்பட்ட ஊடலால் அவரை பிரிந்த மஹாலட்சுமி, பூலோகம் வந்து ப்ருகு முனிவரின் பெண்ணாக வளர்கிறார். திருமகளை தேடி அலைந்த திருமால் நாரதரின் யோசனைப்படி இத்தலத்திற்கு வந்து, சிவபெருமானை வேண்டி தவமிருந்தார். தவத்தினால் மகிழ்ந்த சிவபெருமான், ப்ருகு முனிவரின் ஆஸ்ரமம் சென்று, திருமகளை அழைத்து வந்து, திருமாலுக்கு மணம் முடித்து வைக்கின்றார்.
ஸ்ரீயை (லட்சுமியை) வாஞ்சித்து (விரும்பி) இவ்விறைவனை பூஜித்ததால், இவ்ஊருக்கு ஸ்ரீ வாஞ்சியம் என்ற பெயர் வந்தது. தூய தமிழில் திரு விழை ஆர் (அ) திருவாஞ்சியம் எனக் கூறுகின்றனர். ராஜ கம்பீர சதுர்வேதி மங்கலம் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
குப்தகங்கை குளத்தில் ஸ்நானம் செய்து, இவ்விறைவனை வழிபட்டால் காசிக்கு சென்று விஸ்வநாதரை வழிபட்ட பலன் கிடைப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. யமதர்மராஜன் இங்கு இறைவனை வழிபட்ட காரணத்தால் இத்தலத்தில் யமவாதனை இல்லை என்பர். காசிக்கு வீசம் கூட என்ற பழமொழியே இத்தலத்தைப் பற்றி நிலவி வருகிறது.
உயிரை பறிக்கும் தொழிலை மேற்கொண்டதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்ள யமதர்மராஜன் இங்கு ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி (யம தீர்த்தம்) இவ்விறைவனை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றான் என ஸ்தல வரலாறு கூறுகின்றது. இங்கு யமன் வழிபட்டு இறைவனுக்கு வாகனமாகும் பாக்யத்தைப் பெற்றான். மாசி மக பெருவிழாவின் இரண்டாம் நாளன்று, ஸ்வாமி யம வாகனத்தில் புறப்பாடு.
குப்த கங்கையில் கங்கை ரஹஸ்யமாக வசிக்கின்றாள். கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்நானம் செய்வது விசேஷம்.
இத்தலத்தில் இறப்பவர்கள், வலது காதை மேற்புறமாக இருக்கும்படி கிடப்பார்கள் என்றும் சிவபெருமான் பஞ்சாட்சர உபதேசம் செய்கிறார் என்றும் கூறப்படுகின்றது.
தேவாரத்திருத்தலம் - பூலோக கைலாசம்.