மூன்றாம் குலோத்துங்க சோழன், புத்திர பாக்கியம் வேண்டி, ஸ்தல யாத்திரை மேற்கொண்டான். பயணத்தின்போது இங்கு தங்க நேரிட்டது. இங்குள்ள குளத்தில் நீராடினான். அப்போது குழவி போன்ற பொருள் ஒன்று அவனது கையில் தட்டுப்பட்டது. அதை தண்ணீரிலிருந்து வெளியே எடுத்தான். அது லிங்க வடிவம். லிங்க வடிவத்தைப் பார்த்ததும் சந்தோஷம் மேலிட, மன நிறைவு பெற்று, குளக்கரையிலேயே லிங்கப் பிரதிஷ்டை செய்து கோவிலெழுப்பி வழிபட்டு வந்தான்.
அடுத்த வருஷமே அவனது மனைவி அழகிய குழந்தை ஒன்றை பெற்றெடுத்தாள். தனக்கு வரமளித்த இறைவனுக்கு வம்சவிருத்தீஸ்வரர் எனப் பெயர் சூட்டி தினமும் பூஜித்து வந்தான். புத்திர பாக்கியம் வேண்டி வருவோர்க்கு, வரமளிக்க இங்கேயே எழுந்தருளி அருள் புரிய வேண்டும் என பிரார்த்தித்தான்.
இவ்வூரிலுள்ள திருக்குளத்தில் நீராடி, வன்னிமர விநாயகரை வணங்கி, அங்கிருந்து தெற்கே 1 கி.மீ தூரத்திலுள்ள இடத்தில் ஆதிசேஷனையும், நவ கன்னிகைகளையும், கருப்பண்ணனையும் தரிசித்து பின்னர் வம்சோதகரை தரிசிக்க வேண்டும் என சிவாச்சாரியார் தெரிவிக்கின்றார்.
திட்டாணிக்கல்லில் விதைநெல்லைக் குவியலாக சமர்ப்பித்து, இறைவனிடமும் இறைவியிடமும் புத்திரபாக்கியம் நல்குமாறு பிரார்த்தனை செய்வோர் நலன் பெறுவர். மாவிளக்கு பிரார்த்தனை நேர்த்திக் கடனாக செய்கின்றனர்.