விவசாயிகளுள் - ஏயர்கோக்குடி எனும் பிரிவைச் சேர்ந்த, கலிக்காம நாயனார் எனும் சிவபக்தன், சோழ மன்னனின் படைப்பிரிவுத் தலைவனாக இருந்தார். ஏயர்கோன் என்பது - சிறந்த சேனைத் தலைவனுக்கு மன்னன் வழங்கிய பட்டம். இதனால் இவரை ஏயர்கோன் கலிக்காம நாயனார் என்றே அழைத்தனர்.
சிவத்தொண்டு புரிந்து வந்த கலிக்காம நாயனார், சுந்தரரின் ஒரு செயல் தனக்கு பிடிக்காது போனதால் சுந்தரர் மீது கடுங்கோபம் கொண்டார். அதாவது சுந்தரர், அவர்தம் முதல் மனைவி பரவையாருக்கு தெரியாமல் திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்து கொண்டார். இதையறிந்த பரவையார் சுந்தரர் மீது சினங் கொண்டார். பரவையாரின் கோபத்தை தணிக்க வேண்டி, சிவபெருமானை தூது அனுப்பினார் சுந்தரர். சிவபெருமானை தூது அனுப்பியது கலிக்காம நாயனாருக்கு பிடிக்கவில்லை. இதனால் சுந்தரர் மீது கோபம் கொண்டார்.
கலிக்காம நாயனாரின் சினத்தை தணிக்குமாறு, சிவபெருமானிடம் வேண்டினார் சுந்தரர். கலிக்காமருக்கு சூலை நோயைக் கொடுத்தார் இறைவன். தனக்கு வந்திருக்கும் நோயை குணப்படுத்துமாறு இறைவனிடம் வேண்டி நின்றார் கலிக்காமர். சுந்தரன் வந்து உன் நோயை தீர்ப்பான் என்றார் இறைவன்.
இறைவனை தூது அனுப்பி வேலை வாங்கிய ஒரு அடியவன் என்னை குணப்படுத்துவதா? அதை விட நான் இறப்பதே மேல் என்று கூறி தன் உடைவாளால், தனது வயிற்றைக் கிழித்து உயிரை விட்டார். சுந்தரர் வருவதையறிந்த கலிக்காமரின் மனைவி, கணவரின் உடலை மறைத்து வைத்து விட்டு, அவரை வரவேற்றார்.
நடந்ததை அறிந்து கொண்ட சுந்தரர், தானும் இறப்பதே மேல் எனக் கூறி, தனது உடைவாளால் வெட்டிக் கொள்ள முற்பட்டார்.
பிரத்யட்சமான இறைவன் சுந்தரரை தடுத்தாட் கொண்டார். அதிசய நிகழ்வாக இறந்து கிடந்த கலிக்காம நாயனார் உயிர் பெற்று எழுந்தார் என ஸ்தல வரலாறு.
தேவார வைப்புத்தலம்