மாந்தாதான் எனும் அயோத்தியை ஆளும் அரசன், அனைத்து ஊர்களும் வரி கட்டவேண்டும் என ஆணை பிறப்பித்தான். அந்த ஓலையைக் கொண்டு வந்தவன், இவ்வூர் எல்லையை மிதிக்கும்போது, அவனுக்கே தெரியாமல், ஓலைச்சுவடி ஏட்டில் உள்ள வரி பிளந்து, 'திருவொற்றியூர் நீங்கலாக' என திருத்தி அமைக்கப்பட்டது. இந்த அற்புதத்தை நிகழ்த்தியதால் இறைவனை எழுத்தறியும் பெருமான் எனப் போற்றுவர்.
மதுரையை எரித்த கண்ணகி, அதே சீற்றத்துடன் இங்கு வந்தாள். சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்த தியாகர், சொக்கட்டான் காயை அருகிலுள்ள கிணற்றில் விழும்படி உருட்டினார். அதை எடுப்பதற்காக கண்ணகி கிணற்றினுள் இறங்கினாள். உடனே வட்டப்பாறையைக் கொண்டு கிணற்றினை மூடிவிட்டார் தியாகராஜர். (இதன் மீதுதான் வட்டப்பாறை நாச்சியார் சந்நிதி உள்ளது).
கலிய நாயனார் திருப்பணியைத் தொடர பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதால், தனது தலையை வெட்டிக்கொள்ள முற்பட்டார்.
சங்கிலி நாச்சியாரை மணக்க ஆசைப்பட்ட சுந்தரர், திருவொற்றியூரில், தியாகேசரையே தூது போகும்படி வேண்டுகிறார். ஏற்கனவே சுந்தரரின் திருமணத்தை வெண்ணைநல்லூரில் தடுத்து நிறுத்திய இறைவன், இம்முறை சுந்தரருக்கு உதவ வேண்டி சங்கிலியாரிடம் தூது போனார்.
ஆரூரில் ஒருத்தி இருக்க (பறவை நாச்சியார்), திருவொற்றியூரில் இருக்கும் நான் எப்படி மணப்பேன்? என்று சிவனாரிடம் சங்கிலிநாச்சியார் வினவினாள். 'உன்னை விட்டு பிரிய மாட்டேன்' என்று சத்தியம் வாங்கிக் கொள் என்று யோசனை கூறுகிறார் சிவனார்.
இந்த விபரங்களை அறிந்து கொண்ட சுந்தரர், திருவொற்றியூரிலேயே தங்கி விட்டால், பறவை நாச்சியாரின் கதி என்ன ஆவது? - தவிர திருவாரூர் தியாகேசனைப் பார்க்க முடியாமல் போய் விடுமே என்றெல்லாம் எண்ணி, இறைவன் லிங்கத் திருமேனியிலிருந்து விடுபட்டு, மகிழ மரத்தடி சென்று விட வேண்டும் என்றும், சத்தியம் செய்து முடித்ததும் மீண்டும் சந்நிதிக்கே திரும்பலாம் என்றும் கோரிக்கை விடுக்கிறார்.
இந்த சம்பாஷணையை சங்கிலி நாச்சியாரிடம் ஒப்பித்து விட்டார் சிவபெருமான்.
மறுநாள், மணம் புரிய சென்ற சுந்தரரை, மகிழ மரத்தடியில் நின்று சத்தியம் செய்யும்படி கூறிய சங்கிலி நாச்சியார், அதன்படி மகிழ மரத்தடியில் நின்று சத்தியம் வாங்கிக் கொண்டார். சிவபெருமானும் பிரத்யட்சமாகி அவர்களை வாழ்த்தினார். மகிழ மரத்தடியில் திருவொற்றீசனின் திருவடிகளை தரிசிக்கலாம். இந்த நிகழ்ச்சியை மகிழடி உற்சவம் என்று ஐதீகமாக கொண்டாடுகின்றனர். மாசி மாசத்தில் நடக்கிறது.
தேவாரத்திருத்தலம், சக்தி பீடங்களுள் ஒன்று.