திட்டை என்றால் மேட்டிடம் எனப் பொருள்படும். ஆதி கல்பத்தில் தோன்றிய 28 ஸ்தலங்களுள், பிரளய வெள்ளத்தால் அழிந்து போன 26 ஸ்தலங்கள் போக மிஞ்சியது இரண்டே ஸ்தலம். அவற்றுள் ஒன்று தோணித்திட்டை எனப்பட்ட சீர்காழி, இது வடகுடி திட்டை என அறியப்பட்டது. இரண்டாவது தென்குடித்திட்டை எனப்படும் இந்த ஸ்தலம். வெண்ணாறு - வெட்டாறு எனும் இரு நதிகளின் இடையில் இருப்பதாலும் திட்டை எனப்படுகிறது.
நான்கு வேதங்களும் தனித்தனியே வந்து முறையிட்டு வழிபட்டு தத்தம் குறைகளை தீர்த்துக் கொண்ட ஸ்தலம் திட்டை. இத்தலத்தில் ஸ்வாமி, அம்பாள், பிள்ளையார், முருகன் என அனைவருமே அற்புதங்களை நிகழ்த்தியவர்கள்.
தங்களிடம் ஓரவஞ்சனையாக நடந்து கொண்ட சிற்றன்னையை அச்சுறுத்த காலைத் தூக்கிய யமனை, 'உனது கால் துண்டுபட்டு கீழே விழட்டும்' என சபித்தாள் சிற்றன்னை. தந்தையின் யோசனைப்படி யமன் இங்கு வந்து இவ்விறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்று தென் திசைக்கு தலைவன் ஆனான்.
இங்கு கடுந்தவம் மேற்கொண்டு இவ்விறைவனை வழிபட்ட சனீஸ்வரன் கிரஹநாதன் பட்டம் பெற்றார். சுமாலி எனும் சிவபக்தனைக் கொன்ற தோஷத்திற்கு ஆளான சூரியனும் இங்கு தவம் புரிந்து தோஷம் நீங்கப் பெற்றார்.
மனு பிரஜாபதி புத்திரன் வேண்டி யாகம் செய்தார். பெண் குழந்தையே பிறந்தது. மனுவை அழைத்துக் கொண்டு இத்தலம் வந்த வசிஷ்டர் ஸ்வயம்புதேஸ்வரரை மனமுருக வேண்டி வழிபட்டார். மனுவின் பெண் குழந்தை இலாவை இவ்விறைவன் அருள் புரிந்து ஆண் மகனாக மாற்றினார். இதனால் ஸ்வாமிக்கு வசிஷ்டேஸ்வரர் என்ற பெயரும் வந்தது.
அஸ்வினி தேவர்கள், கார்த்த வீர்யார்ஜீணன், காமதேனுவின் புத்திரிகளான நந்தினி - கமலினி பசுக்கள், ஜமதக்னி முனிவர், பரசுராமர், ஆதிசேஷன், ராஹுவின் மகன் சுமாலி, திருமால், பிரம்மன், பைரவர் ஆகியோர் இவ்விறைவனின் அருளால் நற்பலன்கள் பெற்றுள்ளனர்.
சுகந்த குந்தளா, மங்களா ஆகிய பெண்கள் அம்பாளின் அனுகிரகத்தால் நற்பலன்கள் அடைந்தவர்கள். தேவேந்திரன் புஷ்டி கணபதியின் அருளால் அகஸ்தியரின் குடத்திலிருந்து காவிரியை வெளிக் கொணர்ந்தான். சிந்தூர கணபதி பிரம்மனுக்கும், சுதா கணேசர் விஷ்ணுவிற்கும் அனுகிரகம் செய்துள்ளனர். ஞானபரமூர்த்தியாக விளங்கும் முருகனே இத்தலம் தென்குடித்திட்டை எனப் பெயர் பெறக் காரணமானவன் என்பர்.
தேவர்களுக்கு குருவான ப்ரஹஸ்பதி மேலும் உயர்ந்த பதவிகள் பெற வேண்டி, இத்தலம் வந்து கடுந் தவம் மேற்கொண்டார். ப்ரஹஸ்பதியின் தவத்தினால் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு காட்சி தந்து, நவகிரகங்களில் ஒருவராகும் தகுதியையும் தந்து ஆசிர்வதித்தார். அப்படி பதவி உயர்வு பெற்ற இந்த ஸ்தலத்திலேயே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
சப்த ரிஷிகளுள் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் புதல்வனான குரு எனப்படும் ப்ரஹஸ்பதியின் பார்வை சிறப்பானது.
'குரு பார்க்க கோடி நன்மை' என்பார்கள். பிரம்மணஸ்பதி என்றொரு பெயரும் இவருக்கு உண்டு. வியாழ பகவான் என்றும் கூறுவர்.
தேவாரத்திருத்தலம் - பஞ்சபூத க்ஷேத்ரங்களுள் ஒன்று.