திருக்கழுக்குன்றத்தின் முதன்மையான ஸ்தலம். 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பர்.
கோவிலின் வாசலில் நந்தி தேவரின் அருகில், பூமியில் கொஞ்சம் புதையண்டு காணப்படும் கருடன், கை கூப்பிய நிலையில் காட்சி தருகின்றார். பச்சை மரகதக்கல் திருமேனி என்பர். சிவநிந்தனை செய்த கருடனை, நந்தி தேவர் தன் மூச்சுக்காற்றால் புதையச் செய்ததாக ஸ்தல வரலாறு.
கருடன் செய்த சிவ நிந்தனையால் கோபமுற்ற நந்திதேவர், கருடனை தன் மூச்சுக்காற்றால் அலைக்கழித்து தண்டித்தார். கருடனை விட்டுவிடச் சொல்லி அடங்காமல் வாதம் செய்தார். பின் தான் செய்த தவற்றுக்கு பிராயச்சித்தமாய் பூலோகம் வந்து, இங்கு அமர்ந்து சிவபெருமானைக் குறித்து தவம் செய்தார் என புராண குறிப்பொன்று கூறுகிறது.
சிவபெருமானின் அருளால் தோன்றிய ஒரு கோடி ருத்ரர்கள், திருமால் அசுரர்களுடன் போரிடும்போது, அவருக்கு உதவ அனுப்பப்பட்டனர். போரிட்டதனால் ஏற்பட்ட தோஷங்கள் விலக, ஒவ்வொரு ருத்ரரும் ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டதில் ஒரு கோடி லிங்கங்கள் உருவாகின. ஒவ்வொருவர் முன்பாகவும் சிவபெருமான் தோன்றி அருள் புரிந்து, பின்னர் ஒரே லிங்க வடிவமாக ஐக்கியம் கொண்டு இங்கு எழுந்தருளியதாக வரலாறு. இதனால் ருத்ரகோடீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டார்.
சிவபெருமானின் ஹ்ருதய பகுதியே இத்தலம் என்று கூறப்படுகிறது. ருத்ரன் என்றால் துன்பத்தை ஓட்டுபவன் எனப் பொருள். மேலான வழியில் செல்பவர் என்றும் கூறுவர்.
இறைவன் வெள்ளி விடையில் காட்சி தந்தருளிய ஸ்தலம். இங்கு ருத்ரகோடீஸ்வரரை வழிபட்டால், பலன் கோடியாக பெருகும் என்பர். இங்கு பிரதோஷ வழிபாடு விசேஷமானது.
தேவார வைப்புத் தலம், சக்தி பீடம்.