நரகன் எனும் அரக்கன் இந்திரனோடு சண்டையிட்டு, இந்திரனின் செல்வங்களை எல்லாம் கவர்ந்து சென்றான். இந்திரன் எம்பெருமானை சரணடைந்து காப்பாற்ற வேண்டினான். அரக்கனை சம்ஹாரம் செய்து இழந்த செல்வங்களை இந்திரனுக்கு மீட்டுத் தந்தார் பரந்தாமன்.
சத்யபாமாவிற்கு பாரிஜாத மலர் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் இந்திராணி தர மறுத்துவிட்டாள். பாரிஜாத மலர் தோட்டத்தையே பரிசளிப்பதாக முன்பு கிருஷ்ணன் கூறியதை நினைவுபடுத்தினாள் சத்யபாமா. கிருஷ்ணருக்கு எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், சிவபெருமானின் உதவியுடன் இத்தலத்திற்கு வந்து மலர் தோட்டத்தைக் காண்கிறார். கவளம் என்றால் மலர்கள் நிறைந்த தோட்டம் என்று பொருள். தோட்டத்திலிருந்த பாரிஜாத மலரை தனது மனதிற்கினியாள் சத்யபாமாவுக்கு கிருஷ்ண பகவான் கொடுத்தார் என ஸ்தல வரலாறு. துவாரகையிலிருந்து கண்ணன் சத்யபாமாவுடன் இத்தலத்திற்கு வந்ததால் துவாரகைக்கு சமமானதாகப் போற்றுகின்றனர்.
சேனைத்தலைவர், ருத்ரன் ஆகியோர்க்கு பிரத்யட்சம்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று. (திருநாங்கூர் திவ்ய தேசங்களுள் ஒன்று).
11 திவ்ய தேச ஸ்தலங்கள் தோன்றிய வரலாறு:
சிவபெருமானை யாகத்திற்கு அழைக்காமலும், யாகத்தின் அவிர்பாகத்தை தராமலும், அவமானப்படுத்தி தட்சன் செய்யும் யாகத்திற்கு அழைப்பின்றி போனாள் பார்வதி. எவ்வளவு அறிவுரைகள் கூறியும், காதில் வாங்கிக் கொள்ளாமல் செருக்குடன், யாகத்தை தொடர்ந்து நடத்தினான் தட்சன்.
யாகத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில், யாக குண்டத்தில் குதித்து, தன் ஸ்தூல உடலை அழித்துக் கொண்டாள் பார்வதி.
நடந்தவைகள் அனைத்தையும் அறிந்து கொண்ட சிவபெருமான் ஆவேசம் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார். உக்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கையில், அவரது ஜடாமுடி தரையில் பட்டு, அதிலிருந்து ஒரு சிவன் தோன்றி, ருத்ர தாண்டவம் ஆடினார். இவ்வாறாக மூலசிவனின் ஜடாமுடி தரையில் படும் போதெல்லாம் ஒரு சிவன் தோன்றி ருத்ர தாண்டவம் ஆட, முடிவாக 11 ருத்ரமூர்த்திகள் ஆடிக்கொண்டிருந்தனர்.
11 சிவ வடிவங்கள் கோபாவேசமாக ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தால் உலகிற்கு அழிவு என கலக்கமுற்று பயந்த முனிவர்கள், திருமாலை சரண் அடைந்தனர். திருமாலும் 11 வித வடிவங்களில் தோன்றி, 11 சிவ தாண்டவர்கள் முன் நின்று, அவர்களை சாந்தப்படுத்தினார் என ஸ்தல வரலாறு.
சினம் தணிந்த சிவபெருமான், ஒவ்வொரு வடிவத்தையும் ஒருவருக்குள் ஒருவராக செலுத்தி, இறுதியில் ஒரே வடிவமாக நின்றார். தன்னைப் போலவே ஏகாதச வடிவங்கள் கொண்டு எழுந்தருள வேண்டுமென சிவன் கோரியதால், இத்தலத்தில் 11 பெருமாள்களாக திருமால் சேவை சாதிக்கிறார் என ஸ்தல வரலாறு.