திருமருகலுக்கு மாலை அணிவிப்பது போல் முடிகொண்டான் ஆறு வடக்கிலும், புத்தாறு தெற்கிலும் பாய்ந்தோடுகின்றன.
கதலிவன க்ஷேத்ரமாக இருந்த இப்பகுதிக்கு வந்த குசகேது அரசன், காட்டை வெட்டி சீரமைக்கும்போது ரத்தம் பெருகுவதைக் கண்டு, தேடிப் பார்த்ததில் இவ்விறைவனைக் கண்டெடுத்து பின்னர் ஆலயம் எழுப்பினான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
திருமருகலின் தென்மேற்கே உள்ள வைப்பூர் எனும் ஊரைச் சேர்ந்த செட்டியார் குலப்பெண் ஒருத்தி, தனது மாமனை மணம் செய்து கொள்ள விரும்பினாள். பெற்றோர்களின் ஒப்புதல் கிடைக்காததால், வீட்டுக்குத் தெரியாமல் புறப்பட்டு, மாணிக்கவண்ணரை தரிசிக்க இருவருமாக வந்தனர். தரிசனம் முடித்து இவ்வூரின் விடுதி ஒன்றில் தங்கினர்.
செட்டிப்பெண்ணின் மாமனை பாம்பு ஒன்று தீண்டி விடுகிறது.
இறந்த மாமனின் உயிரை மீட்டுத் தருமாறு, மருகலுடையாரிடம் மன்றாடி வேண்டிக்கொண்டாள். இரவு முழுவதும் அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். பொழுது விடிந்ததும், மாணிக்கவண்ணரை வழிபட அங்கு வந்த ஞானசம்பந்தப் பெருமான், அப்பெண்ணின் துயரக் கதையைக் கேட்டறிந்து, சிவபெருமானிடம் வேண்டி விடந் தீர்த்த பதிகம் ஒன்றைப் பாடுகிறார். இறைவன் கருணையால் மாண்டவன் மீண்டான்.
உயிர் பெற்றெழுந்த வணிகனுக்கும் அந்தப் பெண்ணிற்கும், மாணிக்கவண்ணர் முன்னிலையில், வன்னி மரம் மற்றும் கிணறு இவ்விரண்டையும் சாட்சியாக வைத்து, திருமணம் செய்து வைக்கிறார் ஞானசம்பந்தர். மதுரையிலுள்ள வணிகனின் தாய்-தந்தையர்கள், நடந்த திருமணத்தை நம்ப மறுத்து, அவதூறு பேசினர். மாணிக்கவண்ணரை தியானித்து வேண்டினான் வணிகன். சாட்சியாக இருந்த வன்னி மரமும் கிணறும், மதுரை கோவிலில் காட்சி தந்ததாம். அசரீரியாக வந்த வாக்குப்படி திருமணம் ஒப்புக் கொள்ளப்பட்டது. மதுரையில் சிவபெருமான் திருவிளையாடல் புரிய காரணமாயிருந்த ஸ்தலம்.
பிருகு முனிவரின் சாபத்தால் பூலோகம் வந்த மகாலட்சுமி, வரலட்சுமி நோன்பன்று, இத்தலத்து புஷ்கரிணியில் நீராடி, விமோசனம் பெற்றாள் என்பர். இதனால் புஷ்கரிணி லட்சுமி தீர்த்தம் எனப்படுகிறது.
மருகல் என்பது ஒருவகை கல்வாழை. இது ஸ்தல விருட்சமாக இருப்பதால் இவ்வூருக்கு திருமருகல் எனப் பெயர் வந்தது.
தேவாரத்திருத்தலம்