அழகு முத்து என்பவன் பிறவி ஊமை. இவ்வாலயத்தின் பணிகளை செய்து விட்டு, இங்கே தரும் பிரசாதத்தை சாப்பிட்டு விட்டு, இங்கேயே உறங்குவது வழக்கம். கோவில் அர்ச்சகர், ஒரு பட்டை சாதப் பொட்டலத்தை, ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்துவிட்டு செல்வது வழக்கம். பணிகளை முடித்த பின்னர் அதை எடுத்து உண்பது அழகு முத்துவின் வழக்கம்.
எல்லாம் முருகன் செயல் என்றிருக்கும் அப்பாவியான அழகு முத்துவிற்கு ஒரு நாள் சோதனை ஏற்பட்டது. சாப்பாடு பொட்டலத்தை துணி மூட்டை இடையில் வைத்து விட்டார் அர்ச்சகர். சூரிய அஸ்தமனம் வரை வேலைகளை செய்து விட்டு அயர்ந்து தூங்கிய அழகு முத்து, நள்ளிரவில் விழித்துக் கொண்டு, சாப்பாடு பொட்டலத்தை தேடிக் கிடைக்காது போகவே, பசி தாங்காது அழுதான்.
கையில் பஞ்சாமிர்த கிண்ணத்துடன் வந்த சிறுவன் ஒருவன், இதை சாப்பிடு என பஞ்சாமிர்தத்தை ஊட்டி விட்டான். அதை சாப்பிட்ட அழகு முத்துவுக்கு, பசி தீர்ந்ததோடு இல்லாது, பேச்சும் வந்து விட்டது. முருகன் அருளால் பேசத் தொடங்கிய அழகு முத்துவிற்கு, வள்ளி-தெய்வயானையுடன் காட்சி தந்தார் மெய்கண்ட வேலவர் என ஸ்தல வரலாறு.
பிரெஞ்ச் கவர்னர் டூப்ளேயின் செயலாளரான ஆனந்தரங்கம் இக்கோவிலை கட்டியதாக கூறுகின்றனர்.