சூர சம்ஹாரத்தினால் ஏற்பட்ட தோஷங்களை விலக்கிக் கொள்ள, முருகப் பெருமான் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டார். இதனால் இவ்விறைவனுக்கு முருகுநாதேஸ்வரர் என்ற பெயரும், இவ்வூருக்கு திருமுருகன்பூண்டி என்ற பெயரும் வந்தது.
முருகன் சிவபெருமானை வழிபடுவதற்கு முன்பாக கோயிலுக்கு வெளியே தனது வேலை தரையில் ஊன்றி, அருகே மயிலையும் நிறுத்தி வைத்தார் எனக் கூறப்படுகிறது. சிவபெருமானை வழிபட்டு முருகன் விலக்கி வைத்த பிரம்மஹத்தி தோஷம் தற்போது கோயிலுக்கு வெளியே உள்ள வேம்படி முருகன் சந்நிதியருகே சதுரக் கல்லாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
சேரமான் பெருமானிடமிருந்து பொருட்களைப் பெற்றுக் கொண்டு இவ்வூர் வழியாக சுந்தரமூர்த்தி நாயனார் வந்து கொண்டிருந்தபோது, அவரது பொருட்களை வழிப்பறி செய்தனர். தாம் அல்லாது பிறரிடம் சுந்தரர் பொருட்களைப் பெற்று செல்வதையும், தம்மை பாடாது போவதையும் பொறுத்துக் கொள்ள முடியாத இறைவன், பூத கணங்களை அனுப்பி வழிப்பறி செய்ய செய்தார். பூத கணங்கள் வேடுவர் வேடம் புனைந்து சென்று வழிப்பறிகளை நடத்தினர் எனத் தல வரலாறு.
பொருட்களைப் பறிகொடுத்த சுந்தரர், இவ்வாலயத்திற்குள் வந்து, 'கொடுமையான செயல்கள் புரிந்து களவாடும் வேடுவர்கள் இருக்கும் இவ்வூரில் நீர் ஏன் இருக்கின்றீர்?' எனும் பொருள்பட பதிகங்களை பாடினார். 'அடியார்களின் இடர்களைக் களையும் பொறுப்பிலுள்ள நீர், இச்செயலைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதேன்?' எனவும் வினவினார்.
பூத கணங்கள் பறித்த பொருட்களைத் திருப்பித் தரச் சொல்லி, வாசலில் இருப்பதைக் கண்டு சுந்தரரும் மகிழ்ச்சியுடன் அவற்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டார் எனத் தல வரலாறு.
வழிப்பறி நடந்த சமயம் அதைப் பார்த்துக் கொண்டிருந்த பிள்ளையார், சுந்தரருக்கு ஆதரவாக கூக்கூவெனக் கூவி ஊர் மக்களை அழைத்தார். கூக்குரலிட்டுக் களவை வெளிப்படுத்த முயற்சி செய்த பிள்ளையாரைக் கோயில் வாசலிலேயே மரத்தடியில் இருக்குமாறு பணித்தார் இறைவன்.