முன்பொரு சமயம், சிவபெருமான் சூடியிருந்த தாமரை மலர் ஒன்று கிடைக்கப் பெற்ற துர்வாச முனிவர், இந்திரனிடம் அதைப் பரிசாகத் தந்தார். அதை அலட்சியமாக வாங்கி, தனது ஐராவதத்து மத்தகத்தின் மீது வைத்தான் இந்திரன்.
மலரைத் துதிக்கையால் வாங்கித் தனது காலில் போட்டு மிதித்தது ஐராவதம். "தலைக்கனம் கொண்ட உன் தலை பாண்டியன் ஒருவன் நிலைகுலையச் செய்வான் என்றும், பூவை மிதித்த உன் ஐராவதம், காட்டுயானையாக மாறி பூமியில் திரியட்டும்" என்றும் சபித்துவிட்டார் துர்வாசர்.
பூலோகம் வந்து திரிந்து கொண்டிருந்த யானை, கடம்பவனம் வந்ததும் சுய நினைவு பெற்று, இந்திரன் விமானம் அமைத்து வழிபட்ட லிங்கத்தைத் தேடிக் கண்டுபிடித்து, பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி எழுந்து தாமரை மலர்களால் அர்ச்சித்து சிவபெருமானை வழிபட்டது. பிரத்யட்சமான இறைவன் "வேண்டுவது யாது?" என வினவ, "விமானத்தைத் தாங்கும் எட்டு யானைகளுள், தானும் ஒரு யானையாக இருக்க அருளுமாறு" வேண்டியது.
சாப விமோசனத்தையளித்த சிவபெருமான், ஐராவதத்தை மீண்டும் இந்திரலோகத்திற்கே செல்லுமாறு பணித்தார். யானையைத் தேடி வந்த இந்திரனின் ஆட்களைத் திருப்பி அனுப்பியது ஐராவதம்.
சிவலிங்கத்தின் மேற்கு திசையில் தீர்த்தக்குளம் ஒன்றை அமைத்தது. விநாயகருக்கு ஒரு கோவிலும், சிவபெருமானுக்கு ஒரு கோவிலும் உருவாக்கியது. கிழக்கு திசையில் ஐராவதம் எனும் நகரை நிர்மாணித்தது. அந்த நகரமே நாம் காணும் ஐராவதநல்லூர்.
சிவபெருமானின் 64 திருவிளையாடல்களுள் இரண்டாவது திருவிளையாடலாக இந்த நிகழ்வைக் குறிப்பிடுகின்றனர்.
தைப்பூச விழாவின்போது, மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளுகின்றனர்.
திருமலைநாயக்கரின் அண்ணன் முத்துவீரப்ப நாயக்கர் கட்டிய கோவில் எனக் குறிப்பொன்று தெரிவிக்கின்றது.