விஷ்ணுமூர்த்தி கிரியா சக்தி ஸ்வரூபமாக வகுள மலையில் எழுந்தருளி சேவார்த்திகளுக்கு நற்பயன்களை வழங்குகிறார் என பார்வதி தேவியிடம், கயிலாயத்தில் விவரித்தார் சிவபெருமான். மற்ற இரு சக்திகளான இருவரும் சூரிய மண்டலம் வழியாக ஜோதி ஸ்வரூபமாக வகுளாத்ரி அடிவாரத்திற்கு வந்திறங்கினர்.
ஜோதி ஸ்வரூபங்கள் வருவதைக் கண்ட சூரியன், அவர்களுக்கு மார்த்தாண்டேஸ்வரர் மற்றும் மார்த்தாண்டேஸ்வரி எனப் பெயர்கள் சூட்டி ஆராதித்து, பிரதிஷ்டை செய்தான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
க்ஷேத்ராடனம் செய்யப் புறப்பட்ட கேரள அரசன் குலசேகர வர்மா மலையடிவாரத்தில் சிவ - சக்தியைக் கண்டு வழிபட்டு ஆராதித்தான். இதனால் ஸ்வாமிக்கு குலசேகரநாதர் என்ற பெயரும், அம்பாளுக்கு குலசேகரநாயகி என்ற பெயரும் வந்தன.
கார்முகன் என்ற வேடன் வேட்டைக்கு சென்றபோது தம்பதிகளாயிருந்த மான்களில் ஆண் மானை நோக்கி அம்பெய்தான். ஆண் மான் உருவிலிருந்த தால்ப்யர் என்ற முனிவர் தான் இறக்கும் தறுவாயில் வேடனை சபித்ததால் வேடன், பின்னர் எடுக்கும் பிறவிகளில் தீராத வயிற்று வலி கொண்டு துடித்தான்.
தனது அடுத்த பிறவியில் சித்ராங்கன் என்ற பெயர் கொண்ட அரசனாக இருந்த வேடன், நாரதரின் யோசனைப்படி வகுளகிரி அடிவாரத்திற்கு வந்து மார்த்தாண்டேஸ்வரரை வழிபட்டு தனது வயிற்று வலியை போக்கும்படி வேண்டிக் கொண்டான். ஸ்வாமியின் அருளால் வயிற்றுவலி நீங்கப் பெற்றான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
கேதாரன் என்ற அந்தணன் புத்திரபாக்கியம் வேண்டி இத்தலம் வந்தான். இத்தலத்தின் பெருமைகளை கேள்வியுற்ற அரசன் சந்திரகாந்தன் இத்தலத்திற்கு வந்தான். இருவரும் தாமிரபரணியில் நீராடி மலையின் அடிவாரத்திலுள்ள சிவ - சக்தியை ஆராதித்து பின்னர் மலையுச்சியிலுள்ள ஸ்ரீநிவாசப் பெருமாளை சேவித்து நற்பயன்களை அடைந்தனர் என ஸ்தல வரலாறு கூறுகிறது.