ஸ்தல வரலாறு
கரன் வழிபட்டதால் கரபுரம் என்ற பெயர் கொண்ட ஸ்தலம். பிரம்மனுக்கு விரிஞ்சன் என்றொரு பெயரும் உண்டு. ஆகவே பிரம்மன் வழிபட்டதால் விரிஞ்சை எனப்படும் விரிஞ்சிபுரம் எனப் பெயர் கொண்டது.
சிவபெருமானது அடிமுடி காணும் படலத்தில், முடியைக் கண்டதாக பொய்யுரைத்த பிரம்மன் சாபம் பெற்று, இத்தலத்து சிவாச்சார்யார் சிவநாதருக்கும், நந்திக்கும் மகனாகப் பிறந்து சிவசர்மன் எனப் பெயர் கொண்டு வளர்ந்து வந்தார். திடீரென தந்தையார் காலமானார்.
தந்தையார் இறந்து விட்டதால், நிர்க்கதியான பாலகன் சிவசர்மனுக்கு, உதவி செய்யுமாறு சிவபெருமானை வேண்டினாள் நந்தினி அம்மையார். அவளது கனவில் தோன்றிய சிறுவனை மறு நாள் காலையில் பிரம்ம தீர்த்த குளத்தில் நீராட்டி வை என்று கூறினார். அதன்படியே நீராடி தயாராக இருந்த சிறுவனை, ஒரு வயதானவரின் தோற்றத்தில் வந்த ஒரு முகூர்த்த காலத்திற்குள், உபநயனம், பிரம்மோபதேசம், சிவதீட்சை ஆகியன செய்து வைத்தார்.
பூஜை செய்பவர் இறந்துவிட்டபடியால், கோவிலை பூட்டினார்கள். சிறுவன் வந்து நின்றதும் கதவு தானாக திறந்தது. சிறுவன் உள்ளே சென்று அபிஷேகம் செய்ய முற்பட்டான். ஆறடி உயரத் திருமேனி ஆனபடியால் சிறுவனின் கைகளுக்கு எட்டவில்லை. சிறுவன் தனது இயலாமைக்கு அழுதான். உடனே சிவலிங்கம், முன்பக்கமாக வளைந்து அபிஷேகத்தை ஏற்றுக்கொண்ட அதிசயம் நிகழ்ந்தது.
சிறுவனுக்கு தீட்சை தந்து வழி காட்டியதாலும், மிளகு வியாபாரியான சிவபக்தன் ஒருவனை, கள்வர்களிடமிருந்து காப்பாற்றியதாலும், மார்க்கபந்து எனப் பெயர் கொண்டார்.
தேவார வைப்புத்தலம்