சூரபத்மனை முருகன் சம்ஹாரம் செய்யும்போது தப்பி ஓடிய மாக்கிரகன் என்னும் அசுரன், இவ்விறைவனை வழிபட்டு வரங்கள் பல பெற்றான். இதனால் மாக்கிரகம் என இவ்வூர் பெயருற்று பின்னர் மருவி மாகறல் ஆயிற்றென்பர்.
தானே சிறந்தவன் என்ற செருக்கில் இருந்த பிரம்மா, சிவபெருமானிடம் சாபம் பெற்று விமோசனம் வேண்டி, இத்தலத்திற்கு வந்து சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார். தினமும் ஒரு பழம் தரும் பலா மரத்தை இவ்வூரின் எல்லையில் நட்டு வளர்த்தார் என ஸ்தல வரலாறு.
ராஜேந்திர சோழன் பல ஸ்தலங்களுக்கு ஷேத்ராடனம் செய்து வருகையில், இவ்வூர் அருகே பொன் உடும்பு ஒன்றைப் பார்த்தான். பொன் உடும்பு புதரில் மறைந்தது. தோண்டிப் பார்த்ததில் சிவலிங்கம் இருந்தது. தோண்டியதால் ஏற்பட்ட தழும்பும் காணப்பட்டது. சிவலிங்கமும் உடும்பு வடிவில் காணப்பட்டது. ராஜேந்திர சோழன் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பியதாக ஸ்தல வரலாறு.
இக்கோவிலின் பலாமரத்து பலாப்பழத்தை நாள்தோறும் ராஜேந்திர சோழனுக்கு அனுப்ப கட்டளையிட்டிருந்ததாகவும், அதை அவன் தில்லை நடராஜருக்கு நைவேத்யம் செய்வதாகவும் ஏற்பாடு. காலப்போக்கில் பழம் அனுப்புவது நின்று போகவே, கோபம் கொண்ட சோழன் மரத்தை தீயிட்டு கொளுத்தியதாகவும், பணியாளர்களை வேறு ஊருக்கு கடத்தியதாகவும் செவி வழி கதை ஒன்று உள்ளது. (திருத்தணி - திருவள்ளூர் இடையே விடிமாகறல் என்னும் ஊர்)
கோவிலின் அக்னி மூலையிலுள்ளது அக்னி தீர்த்தம். அக்னி தீர்த்த ஸ்நானம் - அகஸ்தியேச்வர தீர்த்தம்: யமலோக பயம் நாஸ்தி, சிவலோகே நிரந்தரம் என்று ஐதீகம். இதில் நீராடினால் பக்கவாதம், கண்பார்வை கோளாறு, எலும்பு முறிவு போன்ற வியாதிகளிலிருந்து குணம் அடைவதாக கூறுகின்றனர்.
சிறப்பு விசேஷங்கள் : தேவாரத்திருத்தலம் சோம வார தரிசனம் விசேஷம்.