மருத மரத்தை அர்ஜுனம் என்பர். மருத மரத்தை ஸ்தல விருட்சமாக கொண்டுள்ளதால் அர்ஜுனம் என்ற பெயர் பெற்றது.
கர்னூல் ஜில்லாவிலுள்ள ஸ்ரீசைலம் எனும் தலத்திற்கும், அம்பாசமுத்ரம் அருகேயுள்ள ஸ்புடார்ஜுனம் எனப்படும் திருப்புடைமருதூருக்கும் இடையே இருப்பதால் மத்யார்ஜுனம் எனப்படுகிறது. அதாவது இடைமருதூர்.
மருத மரங்கள் நிறைந்த சோலைகளின் நடுவே, உரோமச முனிவர்க்கு இறைவன் ஜோதிர் லிங்கமாக காட்சி தந்ததால் இடைமருதூர் எனப் பெயர் கொண்டது.
தமது ஹிருதயகமலத்தில் இறைவனை இருத்தி, உமா தேவி தியானித்ததை அனைவர்க்கும் விளக்கி, சிவபெருமான் வீற்றிருக்கும் ஸ்தலம். உலக உயிர்கள் யாவும் ஒடுங்கிய மஹாராத்ரியில் ஏகாதசருத்ரர் வந்து வழிபட்டு சிவப்பேறு பெற்ற ஸ்தலம். காசிக்கு சமமான ஆறு ஸ்தலங்களுள் ஒன்று.
கிழக்கே விஸ்வநாதரும், மேற்கே ரிஷிபுரீஸ்வரரும், வடக்கே சொக்கநாதரும், தெற்கே ஆத்மநாதரும் எழுந்தருளியிருக்க, மஹாலிங்கர் நடுவே எழுந்தருளியிருப்பதால் பஞ்சலிங்க ஸ்தலம் என அழைக்கின்றனர்.
அரசன் ஒருவன், குதிரையில் வந்து கொண்டிருந்தபோது, தூங்கிக் கொண்டிருந்த பிராமணனை குதிரை இடறி மிதித்து விட்டது. பிராமணன் இறந்து விட்டான். இதை கவனியாது சென்ற அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டு அவனை பின் தொடர்ந்தது.
இவ்விறைவனை வழிபட வேண்டி, அரசன் கிழக்கு கோபுர வாசல் வழியே உள்ளே சென்றான். பின் தொடர்ந்து வந்த பிரம்மஹத்தியால் கோவிலுக்குள் வர முடியவில்லை. அவன் திரும்பி வருவான் என அங்கேயே காத்திருந்தது. பிரம்மஹத்தி தொடர்வதால் பயந்த அரசன், இறைவனை வணங்கி முடித்ததும் மேல வாசல் வழியே வெளியே சென்று விட்டான். இன்னமும், பிரம்மஹத்தி கீழ வாசலிலேயே காத்திருக்கின்றது.
தேவாரத்திருத்தலம்.