ஸ்தல வரலாறு: புத்ர பாக்யம் வேண்டி நின்ற பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய சிவபெருமான், இந்த மலையை ஏறுவதற்கு படிக்கட்டுக்கள் அமைக்கும்படி பணித்தார். பணியாட்களுக்கு ஊதியம் தரும் அளவிற்கு தன்னிடம் பணம் இல்லையே என வருந்திய பக்தனிடம், இம்மலையில் கிடைக்கும் விராலி எனும் மூலிகை சாற்றினை செப்புக்காசு மீது பிழிந்தால் தங்கமாகும் என அசரீரியாக ஒலித்துக் கூறப்பட்டது. இம்மலையில் கிடைக்கும் விராலி மூலிகையைக் கொண்டு தினம் ஒரு தங்கக்காசு செய்து அதிலிருந்து பெறும் பணத்தைக் கொண்டு படிக்கட்டுக்களை கட்டலானார் பக்தர். இதை தெரிந்து கொண்ட பக்தனின் மனைவி, தனக்கும் ஒரு பொற்காசை தினமும் தர வேண்டும் என பிடிவாதம் பிடித்தாள். அவள் பேச்சைக் கேட்டு இரண்டாம் காசை தங்கமாக்க முற்பட்டதில், செப்புக்காசு தங்கமாக மாறவில்லை. படிக்கட்டு வேலையும் பாதியில் நின்றுவிட்டது. மனைவியின் பேராசையினால் தவறு செய்தமைக்காக வருந்திய பக்தன், ஊர் மக்களிடம் பணம் வசூலித்து பணியை நிறைவு செய்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
மேய்ச்சலுக்கு செல்லும் காராம்பசுவின் மடியிலிருந்து தினமும் பால் காணாமல் போவது கண்டு, பின் தொடர்ந்து சென்ற மேய்ப்பாளர், யாரோ பாலை குடிக்கிறார்கள் என நினைத்து குடிப்பவரின் கழுத்தைப் பிடித்தார். கழுத்தைப் பிடித்ததால் பாறைகளைப் பிளந்து கொண்டு உள்ளே புதைய ஆரம்பித்தார். பாகம் மீதி வெளியே நின்றதால் கைப்பிடி அளவே உள்ள லிங்கமாக இருக்கின்றார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. அவரே மல்லீஸ்வரர்.
ஒருவர் நுழையும் இடைவெளி உள்ள நுழைஞ்சாம்பாறை, ஆனால் உள்ளே ஏழு பேர் நிற்க இடவசதி உள்ளது. முழங்கால் அளவு தண்ணீர் காணப்படுகிறது. மலை மீதுள்ள இந்த தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக் கொள்கின்றனர்.