தேவார காலத்தில் வான்மீகநாதர் ஆலயம் எனப் பெயருற்றிருந்தது. வான்மீக முனிவர் வழிபட்டதால் வான்மியூர் என இவ்வூர் பெயர் கொண்டதாக கூறுவர்.
அகஸ்திய முனிவருக்கு, இவ்விறைவன், பிணிகளுக்கு தீர்வு காணும் மூலிகை மருந்துகளைப் பற்றி உபதேசித்துள்ளார். இதனால் மருந்தீஸ்வரர் என்ற பெயர் உண்டாயிற்று. வான்மீகி வழிபட்டதால் வான்மீகநாதர் என்றும், அமுதத்தால் தேவர்கள் அபிஷேகம் செய்ததால் அமுதேசர் என்றும், நான்கு வேதங்களும் பூஜித்ததால் வேதபுரீஸ்வரர் என்றும் பெயர்கள் வந்தன. காமதேனுப் பசு தினமும் பாலபிஷேகம் செய்து வழிபட்டதால் பால் வண்ண நாதர் என்ற பெயரைக் கொண்டார்.
வான்மீக முனிவர் இத்தலத்தில் அமர்ந்து நீண்ட தவம் மேற்கொண்டார். பங்குனி மாதம் பௌர்ணமி தினத்தன்று, முனிவர்க்கு இங்குள்ள வன்னி மரத்தடியில் சிவலிங்க ஸ்வரூபமாக காட்சி தந்தார் இறைவன். கமலத்தியாகர் நடனத்தையும் அருளச் செய்தார்.
மகரிஷி ஒருவரின் சாபத்திற்காளான காமதேனு ஒரு காட்டுப் பசுவாக மாறி திரிந்து கொண்டிருந்தது. புதரினூடே இருந்த லிங்கத்திற்கு தனது மடியில் இருந்த பாலால் தினமும் அபிஷேகம் செய்து வந்தது. தன்னை தாக்க வந்த வேடன் ஒருவனுடனும், வேட்டையாடிக் கொண்டிருந்த அரசனுடனும் போராட நேரிட்டபோது, காமதேனுப் பசுவின் கால் குளம்புகள் சிவலிங்கத்தின் மீது பதிந்ததால் வருத்தமுற்ற காமதேனுவை, வாத்ஸல்யத்தோடு அனுக்ரஹித்தார் இறைவன் என ஸ்தல புராணம் கூறுகிறது.
சிவபெருமானின் ஜடாமுடியிலுள்ள கங்கையிலிருந்து தெளித்த ஐந்து துளிகளே இங்கு ஐந்து தீர்த்தங்களாக உள்ளன. அவை கிழக்கில் ஜென்மநாசினி, தெற்கில் காமநாசினி, மேற்கில் பாபநாசினி, வடக்கில் ஞானதாயினி, நடுவில் மோட்சதாயினி என ஸ்தல வரலாறு கூறுகிறது.
இந்திரனும், குரங்கு ஒன்றும் ஜென்மநாசினி தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து நற்பலன்கள் பெற்றுள்ளனர். அர்ச்சுணன் பாபநாசினி தீர்த்தத்தில் மூழ்கி இவ்விறைவனை வழிபட்டுள்ளான். குரு பத்தினியைத் தீண்டி சாபம் கொண்ட சந்திரன் இங்குள்ள காமநாசினியில் மூழ்கி நற்கதி அடைந்தான்.
அம்பாள் சந்நிதிக்கு எதிரிலுள்ள கிணற்றை மோட்சதாயினி என்பர். இந்த நீரைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்கின்றனர்.
வடபுறமாக ஸ்தல விருட்சம் வன்னிமரம் இருக்கின்றது. மார்க்கண்டேயருக்கு வன்னி மரத்தடியில் ரிஷபாரூடராக இறைவன் காட்சி அளித்துள்ளார். பிருங்கி மகரிஷி இவ்விறைவனை வழிபட்டுள்ளார்.
தேவாரம் திருத்தலம்.