ஒரு அபசாரத்திற்கு ஆளான பிரம்ம தேவர், பிராயச்சித்தம் வேண்டி, பூலோகம் வந்து இத்தலத்திலுள்ள மந்தார விருட்சத்தின் கீழ் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மந்தாரவனேச்வரரை வழிபட்டு, பூஜித்து வரங்களைப் பெற்றார். அவர் உண்டாக்கிய பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி இவ்விறைவனை வழிபடுவோர்க்கு நற்பலன்கள் அருளுமாறு வேண்டினார்.
வாலகில்லியர் என்பவரது வடிவத்தைக் கண்டு கேலி செய்த மஹாலட்சுமியை சபித்து பூலோகம் செல்லுமாறு பணித்தார். லட்சுமி இல்லாத வைகுந்தத்தில் இருக்கப் பிடிக்காத மஹாவிஷ்ணுவும் பின் தொடர்ந்தார். இருவருமாக மந்தாரவனம் வந்து இவ்விறைவனை வழிபட்டனர். லட்சுமியின் சாபம் நீங்கப் பெற்ற ஸ்தலம் இது. மஹாவிஷ்ணு இங்கு சக்கர தீர்த்தத்தை ஏற்படுத்தி, மாதவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து வழிபட்டு வந்தார்.
கணவனின் சொல் கேளாது, தந்தை மீதுள்ள பாசத்தால், தக்கன் செய்த யாகத்திற்கு, அழைப்பின்றி சென்ற தாட்சாயிணி, அந்த பாவத்தைத் தொலைக்க இங்கு வந்து மந்தார மரத்தின் மூலத்தில் முளைத்தெழுந்த சிவலிங்கத்தை ஆராதித்து, பாவத்தைத் தொலைத்துக் கொண்டாள்.
கோதாவரி நதி தீரத்திலுள்ள ஒரு பட்டணத்தை ஆண்டு வந்த தேவவர்மன் ஒரு சிவ பக்தன். தனது மகனான நற்சோதி என்பவனுக்கு பட்டம் கட்டி விட்டு உயிர் நீத்தான். அவனது மனைவி தருமசீலை என்பவளும் உடன்கட்டை ஏறினாள். பெற்றோரின் திலநீர் மற்றும் பிண்டதானத்தை பித்ருக்கள் நேரில் வந்து பெற்றுக் கொள்ளும் ஸ்தலத்தைத் தேடி, புண்ணிய யாத்திரை புறப்பட்டான்.
க்ஷேத்ராடனம் செய்து கொண்டிருக்கையில் வழியில் காலவ முனிவரை தரிசித்தான். அவரது யோசனைப்படி மந்தாரவனம் வந்து, ஸ்வாமியையும் அம்பாளையும் தரிசித்துவிட்டு பிரம்ம தீர்த்தக் கரை அடைந்தான். குளக்கரையில் தனது மூதாதையர்களும், பித்ருக்களும் இருக்கக் கண்டு, ஆனந்தம் அடைந்தான். பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சங்கல்பம் செய்து தில தர்ப்பணம், பிண்டம் ஆகியன தந்து பித்ருக்கள் அதை வாங்கி உண்பதைப் பார்த்து அளவிலா மகிழ்ச்சி கொண்டான். இந்த நிகழ்வு நடந்ததால் இத்தலத்தை திலதர்ப்பணபுரி என்று அழைக்கின்றனர். அகால மரணம் அடைந்தவர்களுக்கு இங்கு தர்ப்பணம் செய்தால், அவர்கள் சுவர்க்கம் செல்கிறார்கள் என்பது ஐதீகம்.
இது ஒரு தேவாரத்திருத்தலம்.