சிந்துத்வீபர் எனும் மகரிஷியின் ஆஸ்ரமத்தைச் சுற்றியுள்ள பகுதி வனப்பானது. அதைக் கைப்பற்ற எண்ணிய மஹிஷ்மதி எனும் அரக்கி, பெண் எருமை வடிவம் கொண்டு அவரைத் துரத்தலானாள். இதைத் தனது ஞான திருஷ்டியால் தெரிந்துகொண்ட ரிஷி, அவளை எருமையாகவே திரியுமாறு சபிக்கின்றார். ஒரு புத்திரன் உருவான பின்னரே சாப விமோசனம் எனக் கூறிவிட்டார். அவளுக்குப் பிறந்தவனே மகிஷாசுரன் எனும் அரக்கன். இவ்வனத்தில் தவம் மேற்கொண்டிருந்த வைஷ்ணவி தேவியின் அழகில் மயங்கிய அசுரன், அவளைச் சிறைப்பிடிக்கப் படையெடுத்து வந்தான். அவனை வதைத்து பின்னர் மகிஷாசுரமர்த்தினியாகக் கோலம் கொண்டாள் என வராஹ புராணக் குறிப்பொன்று கூறுகிறது.
மகிஷாசுரனின் இம்சையைத் தாங்க முடியாமல் தேவர்களும் முனிவர்களும் நாராயணனிடத்து முறையிட, அவரது ஆலோசனையின் பேரில் அனைத்துத் தேவர்களும் தங்களது கண்களிலிருந்து நெருப்பை வெளியிட, அதிலிருந்து ஆயிரம் சூரியர்களின் பிரகாசத்துடனும், மூன்று கண்களுடனும், கரிய திருமேனி கொண்டும் காத்யாயினி தோன்றினாள். தனது 18 கரங்களில் ஆயுதங்களுடன் சென்று கடுமையாகப் போர் புரிந்து அவனது தலையை மிதித்து அவனைச் சம்ஹாரம் செய்தாள் என வாமன புராணம் கூறுகிறது.
க்ஷத்ரியர்களை நாசம் செய்து முடித்த பரசுராமர் தனது மழுவை தூக்கி எறிந்த இடமான கடல் பகுதி தரைப் பகுதியானது. அங்கு அமர்ந்து தவம் மேற்கொண்டார். அப்போது வானில் நான்கு தேவர்களும் நான்கு தேவியர்களும் தோன்றினார்கள். நான்கு தேவியர்களில் ஒருவரே வாழ்வச்ச கோஷ்டத்தில் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம்.
திருவிதாங்கூர் அரசர்கள் அரியணை ஏறும் முன்னரும், போருக்குச் செல்லும் முன்னரும் தங்களது வாளை அம்மனின் திருவடிகளில் சமர்ப்பித்துத் தொடங்குவது வழக்கம். இதனால் வாள் வைத்த கோட்டம் எனப் பெயருற்று பின்னர் மருவி வாழ்வச்ச கோஷ்டம் என மாறியது.