அகஸ்தியர், வாமதேவர், காசிபர், அத்ரி, பரத்வாஜர், கௌதமர், விஸ்வாமித்ரர், ஜமதக்னி, வசிஷ்டர் ஆகிய ஒன்பது முனிவர்கள் இத்தலத்தில் தத்தம் பெயரால் தீர்த்தங்கள் அமைத்து அதன் கரையில் சிவலிங்கங்களை ஸ்தாபித்து வழிபட்டுள்ளனர்.
இந்த ஒன்பது தீர்த்தங்களுக்கு நடுவில், லிங்கத்திலிருந்து சோமாஸ்கந்தராக வெளிப்பட்டு நடனமாடியவரே தீர்த்த விடங்கர் என ஸ்தல வரலாறு. பிறகு முனிவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சம்புபட்ச திருமேனியாக இங்கு எழுந்தருளினார் என ஸ்தல வரலாறு. தீர்த்த விடங்கர் ஆடும் நடனம் சந்திரசூடாமணி சுந்தரத் தாண்டவம் என்பதாகும்.
பிரம்மா தனது ரஜோ குணம் நீங்கிட, இங்கு பிரம்ம தீர்த்தம் உண்டாக்கி அதன் கரையில் அமர்ந்து தவம் செய்தார். வில்வ மரத்தடியில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி பிரம்மனுக்கு தரிசனம் தந்தவர் இத்தலத்து பவௌஷதீஸ்வரர்.
விருபாசுரன் எனும் அசுரனின் மனைவியான ஜல்லிகை என்பவள் சிறந்த சிவபக்தை. தன் கணவன் இறந்தபோது, கண்வ மகரிஷியின் உபதேசப்படி, பவௌஷதீஸ்வரரை தரிசித்து விட்டு அம்பாளிடம் சென்று முறையிட்டாள். பின் அம்ருத புஷ்கரிணியில் மூழ்கி, தீர்த்தத்தை கணவன் மீது தெளித்தாள். இறந்தவன் உயிர் பெற்று எழுந்தான் என ஸ்தல வரலாறு.
அம்பாள் சந்நிதியின் எதிரே உள்ளது மாங்கல்ய தீர்த்தம். சித்திரை மாதத்தில் 25 நாட்கள் பெருந்திருவிழா, குடமுழா எனும் பஞ்சமுக வாத்யம், பாத தரிசனம் என விழா அமர்க்களப்படும்.
இங்குள்ள சுப்ரமண்ய சந்நிதியின் அர்ச்சகர் நெறி தவறி தீய பழக்கங்களில் ஈடுபட்டிருந்தபோது, ஷண்முகருக்கு அபிஷேகம் செய்ய சந்நிதிக்குள் நுழைந்ததும் ஒரு பெரிய பாம்பு ஒன்று விருட்டென்று வெளிப்பட்டு அவரை துரத்தி, கோவிலுக்கு வெளியே அனுப்பிவிட்டு பின்னர் மறைந்து போனதாக கூறுகின்றனர்.