தனக்கு ஏற்பட்ட தோஷங்களைப் போக்கிக் கொள்ள, பிரம்ம தேவன் இத்தலத்தில் தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். வெண்மணல் கொண்டு தன் கைகளாலேயே உருவாக்கிய லிங்கத்தை அனுதினமும் பூஜித்து, தோஷங்களிலிருந்து விடுபட்டார் என ஸ்தல வரலாறு.
பீமன் - பகாசூரனைக் கொன்ற பாவத்திலிருந்தும் ஹத்தியிலிருந்தும் விடுபட இவ்விறைவனை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றான் என ஸ்தல வரலாறு.
'கோள்' என்றால் குற்றம் என்ற பொருளும் உள்ளது. 'கிரகங்கள்' என்ற பொருளும் உள்ளது. நவகிரகங்களின் குற்றங்களை இவ்விறைவன் நீக்கி அருளியதால் இவ்வூர் 'கோளிலி' எனப் பெயர் கொண்டது.
விடங்கர்: 'டங்கம்' என்றால் உளி, 'விடங்கம்' என்றால் உளி தீண்டாமல் உருக்கொண்டவர் எனப் பொருள்.
புத்திரப்பேறு வேண்டி, திருமால் - பிருகு மகரிஷியின் யோசனைப்படி, சோமாஸ்கந்தரை வழிபட்டு வந்தார். ஒரு க்ஷணமும் பிரியாது, சோமாஸ்கந்தரை பூஜித்து வந்தார் திருமால்.
புத்திர பாக்கியம் வேண்டி திருமாலிடம் வந்த இந்திரனுக்கு தான் வழிபட்டு வந்த சோமாஸ்கந்தரை தந்தருளினார் திருமால்.
வாலாசுரன் எனும் அசுரன் தேவர்களை எல்லாம் வென்று தேவேந்திரனை போருக்கழைத்தான். இந்திரனால் அவனை வெல்ல முடியாமல் போனதால், வியாழனின் யோசனைப்படி, முசுகுந்த சக்ரவர்த்தியின் உதவியை நாடினான். எதற்கும் அஞ்சாத முசுகுந்தன் போரில் வாலாசுரனை தோற்கடித்து வெற்றி கொண்டான். வெற்றி பரிசாக திருமாலிடமிருந்து பெற்ற சோமாஸ்கந்தரை கேட்டான்.
அதை தர மனமில்லாத தேவேந்திரன், மயனின் உதவியுடன், அதைப் போலவே ஆறு மூர்த்திகளை உருவாக்கி, திருமாலிடமிருந்து பெற்றதையும் சேர்த்து, ஏழு மூர்த்திகளை முசுகுந்தனிடம் காண்பித்து இந்த ஏழு திருவுருவங்களில் நீ வேண்டுவது யாது எனக் கேட்டான்.
சிறந்த சிவபக்தனான முசுகுந்தனிடம், இறைவனே - இதனைக் கேள் என சுட்டிக் காட்டினார். இறைவனின் வழிகாட்டுதலால் சரியான மூர்த்தியை அடையாளம் காண்பித்த முசுகுந்தனின் அறிவாற்றலைக் கண்டு வியந்த இந்திரன், மயன் மூலமாக உருவாக்கிய ஆறையும் சேர்த்து ஏழு மூர்த்திகளையுமே முசுகுந்தனுக்கு பரிசாக தந்து விட்டான்.
இதுவே சப்த விடங்கர்கள் உருவானதற்கான புராண குறிப்புகள்.
தேவாரத்திருத்தலம் - சப்த விடங்க ஸ்தலங்களுள் ஒன்று.