திருக்கடையூரில் யமனை சம்ஹரித்த சங்கரர் கோபம் தணிந்து எழுந்தருளிய ஸ்தலம். இங்குள்ள காசி தீர்த்தத்திலிருந்து தினமும் அபிஷேக நீர் எடுத்துச் சென்று வீரட்டானருக்கு அபிஷேகம் செய்கின்றனர். அது கோவிலின் தென்புறம் வயல்களின் நடுவே உள்ளது.
பிரம்மாவின் ஆயுள் காலம் முடிந்ததும் தனது உடலை யோகாக்னியில் லயப்படுத்துவார். உடல் எரிந்து சாம்பல் ஆகிவிடும். பின்னர் இறைவனருளால் பிரம்மா முதல் அனைவருமே மீண்டும் படைக்கப்படுவர். இதனை கல்பம் என்று கூறுவர். கல்பத்திற்கு கல்பம் வெவ்வேறு பிரம்மாக்கள் இருப்பார்கள்.
(மனித கணக்குப்படி 2000 சதுர் யுகங்கள் - பிரம்மாவிற்கு ஒரு நாள். 365 நாட்கள் - ஒரு வருஷம். 100 வருஷங்கள் - பிரம்மாவின் ஆயுள் காலம்.)
சிவபெருமான் பிரம்ம தேவரை எரித்து நீறாக்கி மீண்டும் உயிர்பித்து அவர் மூலம் படைப்புத் தொழிலை நடத்திய ஸ்தலமாதலால் மயானம் எனப் பெயர் பெற்றது. மெய்ஞ்ஞானம் என்றும் கூறுவர்.
பங்குனி மாதம் அஸ்வதி நட்சத்திர நாளன்று சிவபெருமான் கங்கா தீர்த்தத்தை மார்க்கண்டேயருக்காக வரவழைத்த நாள். அன்றைய தினம் இங்கு ஸ்நானம் செய்வது பிரபலமாயிருக்கின்றது. மற்றைய நாட்களில் திருமஞ்சன உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்துவர். அன்று பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும், அமிர்தகடேஸ்வரர்/மார்க்கண்டேயர் தீர்த்தவாரியும் நடைபெறும்.
தேவாரத்திருத்தலம் - பஞ்ச மயான ஸ்தலங்களுள் ஒன்று.