மும்மணிக்கோவை நூலில் இத்தலத்திற்கு 12 புராதனப் பெயர்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றுள் வழக்கில் மிக்குள்ளதாக உள்ளவை: பிரம்ம தேவர் பூஜித்து வழிபட்டதால் திருபிரம்மபுரம் என்ற பெயர். இவ்விறைவன் மூங்கில் வடிவில் தோன்றியதால் வேணுபுரம். பிரளய வெள்ளத்தில் உலகு மூழ்கியிருக்கையில் தோணியாக வந்து தங்கியிருந்ததால் தோணிபுரம். அமரர்களுக்குப் புகலிடம் ஆனதால் புகலி. பிரகஸ்பதி வழிபட்டு குருத்துவத்தைப் பெற்றதால் வெங்குரு. சிரம் இழந்து பாம்பின் தலையைக் கொண்ட ராகு பூஜித்ததால் சிரபுரம். தம்மைப் பற்றிக்கொண்ட மலங்கள் நீங்க உரோமச முனிவர் வழிபட்டதால் கழுமலம். அக்னி தேவன் புறா வடிவில் வந்து சிபி சக்ரவர்த்திக்கு அருளியதால் புறவம். இறைவனோடு போட்டி போட்டு ஆடிய பழி நீங்க காளிதேவி வழிபட்டதால் ஸ்ரீகாளி. ஸ்ரீகாளி என்பதே நாளடைவில் சீகாழி என்றானது. பிரிட்டிஷ் காலத்தில் சீயாளி என்று உச்சரித்தனர்.
எவராலும் வெல்ல முடியாத உக்ரசிவனை வயிரவர் என்கிறோம். வயிரத்திற்குத் தூய தமிழ்ச் சொல்லாக 'காழ்' என உள்ளது. வைரவ மூர்த்தியின் இடமாக இருப்பதால் காழி. சிறப்புமிக்க சொல்லான 'சீர்' என்பதைச் சேர்த்து சீர்காழி எனப் பெயர் உருவானதாகக் கூறுவர்.
பிரம்மன் தனது படைப்புத் தொழிலைத் தொடங்கும் முன், தமக்கு முன்னே தோன்றியழிந்த பிரம்மர்கள் வழிபட்ட பிரம்மபுரியான சீர்காழியை அடைந்து, சிவபெருமானைத் தியானித்து, பஞ்சாட்சர உபதேசம் பெற்று, வேணு வனத்தில் சுயம்புவாய் தோன்றியிருந்த லிங்கத்தைப் பூஜித்து, சிவனருள் பெற்றான். இதனால் மகிழ்ந்த பிரம்மன் இங்கு தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி, இவ்வாலயத்தை நிர்மாணித்து வழிபட்டதால், இவ்விறைவன் பிரம்மபுரீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார்.
வாயு தேவனும், ஆதிசேஷனும் யார் வலிமை மிக்கவர் என்ற போட்டியில் இறங்கினார்கள். ஆதிசேஷன் கயிலை மலையைத் தன் உடலாலும் ஆயிரம் தலை பாம்புப் படங்களாலும் மூடிக்கொண்டான். கடுங்காற்றை வேகமாக வீசிய வாயுதேவனின் சீற்றத்தில், தனது ஆயிரம் தலைகளில் ஒரு சில தலைகளை ஆதிசேஷன் தூக்கினான். அதைப் பயன்படுத்திக்கொண்டு, வாயு தேவன் பத்து கிளைகளாகப் பிரித்து வீசினான். அப்படி வீசப்பட்ட சிகரத்தின் பத்து கிளைகள் தென்கயிலாயம் என வெவ்வேறு இடங்களில் உள்ளன.
உரோமச முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு பெரிய கிளையை இருபது பறவைகள் கொண்டு வந்து சீர்காழியில் நிறுத்தின. அதன் மீது உமாமகேஸ்வர் அமர்ந்து, உரோமச முனிவர்க்கும், காலவித்து என்ற மன்னனுக்கும் தரிசனம் தந்தார். காலப்போக்கில் அந்த மலை பூமியில் அழுந்தி மறைந்தாலும், அந்த நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில், காலவித்து மன்னன் சுதைக் கட்டடமாக ஒரு கட்டுமலையைக் கட்டுவித்து, அதை இருபது பறவைகள் தாங்குவது போல் சிற்பங்களாக வடித்து ஸ்தாபித்தான்.
பொங்கி வந்த ஊழி வெள்ளத்தில் உலகம் முழுவதும் மறைந்திருக்க, இத்தலம் மட்டும் மூழ்காமல் இருந்தது. பிரணவத்தைத் தோணியாகக் கொண்டு உமா தேவியாரோடு பயணம் செய்துகொண்டிருந்த சிவபெருமான், அந்தக் கட்டுமலையையே மூலாதார க்ஷேத்ரமாகக் கொண்டு எழுந்தருளிவிட்டார் என ஸ்தல வரலாறு.
மகாபலி சக்ரவர்த்தியைப் பாதாளத்தில் அழுத்த எடுத்த அவதாரங்களினால் செருக்குற்ற திருமாலின் செருக்கை அடக்க வடுகநாதராக உருவெடுத்து, அவதார நோக்கத்தைப் புரிய வைத்து, அவரது முந்தைய அவதாரத்தின் தோலை உரித்துச் சட்டையாக அணிந்துகொள்கிறார். இதனால் சட்டநாதர் என்றானார்.
அப்பாவின் விரலைப் பற்றிக்கொண்டு, தானும் கோவிலுக்கு வருவேன் எனப் பிடிவாதம் செய்யும் குழந்தையுடன் கோவிலுக்கு வருகிறார் சிவபாத ஹ்ருதயர். பிரம்ம தீர்த்தக் குளக்கரைப் படிக்கட்டில் உட்கார வைத்துவிட்டு, தண்ணீருக்குள் இறங்கி, இடுப்பளவு ஆழத்தில் நின்றுகொண்டு, காலை அனுஷ்டானங்களைச் செய்துகொண்டும், தோணியப்பரின் விமானத்தைத் தரிசித்துக்கொண்டும் இருந்தார்.
தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் சொல்லப்படும் மந்திர அனுஷ்டானத்தின்போது, குளத்தில் அப்பாவைக் காணவில்லையே எனக் குழந்தை அழ ஆரம்பித்துவிட்டது. தோணியப்பர் விமானத்தை நோக்கியபடி பலமாக அழுதுகொண்டே நகர்ந்தது. உமா சஹித மகேஸ்வரராக, ரிஷபாரூடராக தோணியப்பர் குளக்கரையை அடைந்தார். உமா தேவியார் முலைப்பாலைப் பொற்கிண்ணத்திலிட்டு ஊட்டினார்.
குளித்து முடித்து, குளக்கரைப் படிகளேறி மேலே வந்த தந்தை, குழந்தையின் வாயில் பால் வடிவதைக் கண்டு, யாரோ இறைவனுக்காகக் கொண்டு வந்ததை எடுத்துக்குடித்துவிட்டான் எனக் கோபித்தார். பின்னர் பால் ஊட்டியது யார்? எனக் கேட்டார். விமானத்திலுள்ள உமாமகேஸ்வரரைக் காண்பித்தது குழந்தை. குழம்பி நின்ற தந்தைக்கு மேலும் வியப்பைத் தரும் வகையில் பாட ஆரம்பித்தது குழந்தை.
மூன்று வயது நிரம்பாத குழந்தை, 'தோடுடைய செவியன்' எனத் தொடங்கி 'பிரம்மாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே' என முடியும் பதிகத்தைப் பாடிக்கொண்டே தோணியப்பர் கோவிலுக்குள் நுழைந்தது.
இறைவனும் இறைவியும் வந்து ஆளுகை தந்தமையால் 'ஆளுடையபிள்ளை' என்ற செல்லப்பெயர் கொண்ட குழந்தை, சிவஞானப்பாலை உண்டதனால் 'ஞானசம்பந்தர்' என்ற பெயரையும் கொண்டது.
இந்த நிகழ்வை ஐதீகமாகக் கொண்டாடும் வகையில் திருமுலைப்பால் விழா, ஞானசம்பந்தர் தோன்றிய நாளான சித்திரை மாத திருவாதிரை நாளில் நடைபெறுகிறது. இது பிரம்மபுரீஸ்வரர் கோவிலின் பெருவிழாவின் இரண்டாம் நாளில் அமையும்.
சம்பந்தரின் முதல் தேவாரம் தோன்றிய ஸ்தலம். இத்தலத்திற்காகப் பாடப்பட்ட 71 தேவாரங்களுள் 67 பாடல்கள் சம்பந்தரால் பாடப்பெற்றவை.
பிரம்மா, பிரகஸ்பதி, ராகு, அக்னி, காளி, உரோமச முனிவர், காலவித்து மன்னன் ஆகியோர் வழிபட்ட ஸ்தலம். சிபி சக்ரவர்த்தியைச் சோதித்த பாவம் தீர அக்னி புறா வடிவில் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளான்.
வடக்குச் சுற்றில், அம்மன் சந்நிதிக்கு முன்பிருந்து ஆரம்பித்து, பிரகாரத்தின் கிழக்கு முனை வரை நீண்டு வியாபித்துள்ளது பிரம்ம தீர்த்தம். நான்கு பக்கங்களிலும் நல்ல படிக்கட்டுகளுடன் கூடிய பெரிய குளம்.
ஸ்தல புராண தொடர்புடைய காட்சிகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
தேவாரத் திருத்தலம்.