பிருகு முனிவர் சௌபாக்ய மஹாயாகம் முடித்து, அதன் ஹவிர்பாகத்தை கொடுப்பதற்காக வைகுண்டம் செல்கிறார். ஸ்ரீஹரியோ மெய்மறந்து தூங்கும் பாவனையில், திருவிளையாடல் புரிகிறார். கோபமுற்ற முனிவர் விஷ்ணுவை மார்பில் உதைக்கிறார். இதனால் வருத்தமுற்ற மகாலட்சுமி, பூமிக்கு வந்து, தவத்தில் ஆழ்ந்துவிடுகிறார். வராஹ அவதாரம் எடுக்க வேண்டியதை நினைவுபடுத்துவதே, முனிவரின் அச்செயல், என விளக்குகிறார் பகவான். பின்னர் மகாலட்சுமி சமேதராக, ஆதிவராஹ மூர்த்தியாக, பிருகு முனிவருக்கு தரிசனம் தந்தார் என ஸ்தல வரலாறு.
ஸ்ரீ வராஹராக காட்சி தந்த பெருமாள் தான் பூலோகத்திலேயே தங்கி மக்களை ரட்சிப்பதற்காக தேவபர்வதத்தை பூமிக்கு கொண்டு வா என கருடனிடம் பணித்தார். கருடாழ்வாரும் பர்வதத்தை எடுத்துக் கொண்டு பறந்து வரும்போது, அது இரண்டு துண்டுகளாக பிளந்து ஒரு துண்டு கீழே விழுந்தது. மற்ற பகுதியை கருடன் பூமியில் ஓரிடத்தில் வைக்கிறார். அதில் கோவில் கொண்டு பக்தர்களை ரட்சிக்கின்றார் திருமால். அதுவே திருமலை-திருப்பதி ஆகும்.
விஜயநகர அரசன் ராஜா தோடர்மால் சிறந்த விஷ்ணு பக்தன். திருமலை-திருப்பதிக்கு திருப்பணிகள் செய்து கொண்டிருப்பவன். பர்வதத்தின் மற்றொரு பகுதி கீழே விழுந்தது அல்லவா? அது விழுந்த இடத்தை அரசனுக்கு சுட்டிக் காட்டி, அங்கே கோவில் ஒன்றை ஸ்தாபிக்குமாறு பணித்தாராம் திருமால். அதன்படி ராஜா தோடர்மால் எழுப்பிய கோவில் இது.
இத்தலத்தின் மீது பறக்கும்போது, சஞ்சீவி மலையை பூமியில் வைக்காமல் தனது வலது கரத்திலிருந்து இடது கரத்திற்கு மாற்றிக் கொண்டார் ஹனுமன். இதனால் இத்தலம் வையாவுர் என்றானது. தேவ பர்வதத்தின் ஒரு பகுதி திருமலை, மறு பகுதி வையாவுர் என்பதால் இத்தலம் திருமலை-வையாவுர் எனப் பெயர் கொண்டது.
முனையக்கோன், பிராட்டிக்கோன் என்னும் பக்தர்களுக்காக கலியுகத்தில் பிரசன்ன வெங்கடேசராக, பிரசன்னம் ஆனார் என்றும், நடந்தே வந்ததால் குடையாக ஆதிசேஷன் வந்ததாகவும் ஸ்தல வரலாறு. வேங்கட திருமலையில் நடக்கும் உற்சவங்களனைத்தும் இங்கே நடக்கின்றன. சிரவண தீபம், பேழையடியில் கொதிக்கும் நெய் சாட்சி பிரசாதமாக கொடுப்பது பிரசித்தம்.