1852 ஆம் வருடம் சாத்தப்ப பிள்ளை - செங்கமல அம்மாள் தம்பதியினருக்கு தலைப்பிள்ளையாகப் பிறந்து, அப்பாவு எனப் பெயர் கொண்டு வளர்ந்து வந்த சிறுவன், நாகநாதர் கோவில் பிரம்மோத்ஸவம் காணச் சென்று, அன்றைய தினத்திலிருந்து சிவநாமத்தை ஓயாது கூறிக் கொண்டிருந்தான். "கங்கையை சடையிற் பதித்து" என ஆரம்பித்து தனது முதல் பாடலை எழுதினார். சேது மாதவையர் என்பவர் இவரது வலச்செவியில் சடச்சக்கர மந்திரத்தை ஓதினார் எனக் கூறப்படுகிறது. உப்பு, புளி, காரம் விலக்கி உண்ண ஆரம்பித்து, பின் துறவறம் பூண்டார். 1895ல் பாம்பனிலிருந்து புறப்பட்டு சென்னை வந்தார். ஜார்ஜ் டவுனிலுள்ள பங்காரு அம்மையார் வீட்டில் தங்கி, முருக பத்தியையும் ஆன்மீகத்தையும் வளர்த்து வந்தார். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வந்தார்.
தம்பு செட்டித் தெருவில் போய்க் கொண்டிருந்தபோது குதிரை வண்டி மோதி கீழே விழுந்ததால் கால் முறிந்து போனது. நிழற்படம் பார்த்த மருத்துவர்கள் முறிந்த கால் பொருந்த வாய்ப்பில்லை எனக் கூறி விட்டனர். பொது மருத்துவமனையில் சேர்ந்த 11 ஆம் நாள் இரவு, மயில்கள் தோகை விரித்தாடும் காட்சியையும், சிவப்பான குழந்தை ஒன்று இவர் அருகே கால் நீட்டி படுத்துள்ளவாறும் கனவு கண்டார். 12 ஆம் நாள் நிழற்படம் எடுத்துப் பார்த்ததில் முறிந்த கால் பொருந்தியிருக்கும் அதிசயத்தை மருத்துவர்கள் கண்டு வியந்தனர்.
30.5.1929 அன்று காலை 7.15 மணி அளவில் வியாழக்கிழமையன்று, எல்லோரும் கூடி நின்று பார்த்திருக்க, சுவாசத்தை இழுத்து அடக்கி, ஜீவ சமாதி அடைந்தார். வைகாசி மாத சஷ்டி திதி, அவிட்ட நட்சத்திர சுபவேளையில் சமாதியடைந்தார் எனக் கூறுவர்.