ஸ்ரீ வல்லபன் எனும் அரசன் தான் வழிபடுவதற்காகவும், பக்தர்கள் வழிபடுவதற்காகவும், அருகேயுள்ள ஊரின் கோவிலில் வழிபடுவதற்காகவும் மூன்று லிங்கங்களை உருவாக்கும் பணியைச் சிற்பிகளிடம் ஒப்படைத்தான்.
அப்போது அங்கு வந்த ஆண்டி ஒருவன் தனக்கும் ஒரு லிங்கம் செய்து தருமாறு சிற்பிகளிடம் கேட்டான். அதற்குச் சிற்பிகள் உடன்படவில்லை. உடனே தனது கையில் வைத்திருந்த மூலிகைச் சாற்றை அந்த மூன்று லிங்கங்களின் மீது வீசினான் ஆண்டி. லிங்கங்கள் தீப்பிழம்பாக மாறின. "ஏன் இப்படிச் செய்தீர்கள்?" என்று அரசன் கேட்டதற்கு, சிற்பி உருவாக்கிய லிங்கங்களில் தேரை குடிகொண்டிருப்பதாகக் கூறினான் ஆண்டி.
"இந்த மூன்று லிங்கங்களையும் ஆற்று நீர், ஊற்று நீர், வேற்று நீர் ஆகிய மூன்று நீர் (முன்னீர்) நிலைகளருகே பிரதிஷ்டை செய்யுமாறு" கூறிவிட்டு ஆண்டி திடீரென மறைந்தான். ஆண்டியாக வந்தது சிவபெருமானே என அரசன் உணர்ந்தான். முன்னீர் நிலைகளருகே பிரதிஷ்டை செய்ததால் இவ்வூர் முன்னீர் பள்ளம் எனப் பெயருற்றது.
தேரை குடிகொண்டிருந்த கற்களில் லிங்கம் செய்ய முற்பட்ட சிற்பிகள் சாபம் பெற்றதால் பல்லிகளாக உருமாறி அம்பாள் சந்நிதியில் உள்ளனர். சாப விமோசனம் வேண்டி, அந்தச் சிற்பிகள் பச்சைக்கல்லில் திருமால் சிலை ஒன்றைச் செய்தனர். அந்தச் சிலையை லட்சுமி நாராயணராக அருகிலுள்ள கோவிலில் காணலாம்.