இத்தலத்திற்கு வந்த பிரம்மா இவ்விறைவனை பூஜிக்கும்போது, வேளைக்கு ஒரு வர்ணமாக சிவபெருமான் இருப்பது கண்டு அவருக்கு பஞ்சவர்ணேஸ்வரர் எனும் பெயர் சூட்டினார்.
உதங்க மா முனிவரின் மனைவியான பிரபை என்பவள் கங்கையில் நீராடும்போது அவளை முதலைகள் கடித்து விட்டன. இதனால் மனம் நொந்து க்ஷேத்ராடனம் புறப்பட்டு சென்ற உதங்க முனிவர் இத்தலம் வந்து இங்குள்ள இறைவனை தரிசித்தபோது பஞ்சவர்ணம் காட்டியருளியதாக ஸ்தல வரலாறு.
உதங்க முனிவர்க்கு - காலை வழிபாட்டின்போது ரத்ன லிங்கம், உச்சி காலத்தில் ஸ்படிக லிங்கம், மாலை நேரத்தில் பொன் லிங்கம், இரவு முதல் ஜாமம் வரை வைர லிங்கம், அர்த்த ஜாம வழிபாட்டில் சித்திர லிங்கம் என பஞ்ச வர்ண லிங்கங்களாக தரிசனம் தந்தார் சிவபெருமான். இப்போது இறைவன் சித்திர லிங்கமாகவே சாட்சி தருகின்றார்.
சோழ மன்னன் யானை மீது பவனி வந்துக் கொண்டிருந்தபோது யானைக்கு மதம் பிடித்து யாருக்கும் அடங்காமல் இருந்ததாம். அப்போது கோழி ஒன்று பறந்து வந்து யானையின் மத்தகத்தில் அமர்ந்து தனது மூக்கால் கொத்தி, யானையின் திமிரை அடக்கியதாம். இதனால் இவ்வூர் கோழியூர் என்ற பெயரைக் கொண்டது.
எங்கு சிவ தரிசனம் செய்தாலும், எங்கு சிவ பூஜை செய்தாலும் இங்குதான் வந்து உறையும் என்பதால் இவ்வூருக்கு உறையூர் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
கோச்செங்கட் சோழன் கட்டிய 78 மாடக் கோவில்களுள் ஒன்று. புகழ் சோழ நாயனார் அவதரித்த ஸ்தலம். அவரது திருவுருவம் ஒன்றும் இருக்கின்றது.
தேவாரத்திருத்தலம்